PUBLISHED ON : ஆக 04, 2024 12:00 AM

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்: பார்லிமென்டில்சக்கர வியூகம் குறித்து நான் பேசியது, இரண்டில் ஒருவருக்கு பிடிக்கவில்லை. என் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக, அதில் இருப்பவர்களே தகவல் தெரிவிக்கின்றனர். அமலாக்கத் துறையை வரவேற்க, டீ, பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்.
டவுட் தனபாலு: நீங்க இவ்வளவு முன் தயாரிப்புடன் இருப்பதை பார்த்தால், 'மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை'ன்னு எடுத்துக்கிறதா அல்லது எல்லா ஆவணங்களையும், 'கிளியர்' பண்ணி, வீட்டை துப்புரவா துடைச்சு வச்சிருக்கிறோம்னு எடுத்துக்கிறதா என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., பொதுச் செயலர்பழனிசாமி: வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்து, காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறும். அதற்கான தகவல்களும், பாசிட்டிவ் சமிக்ஞைகளும் அந்த பக்கம் இருந்து தொடர்ந்து வருகின்றன.தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.,வால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை, அக்கட்சிகள் முன்வைக்கும். அவற்றை தி.மு.க., ஏற்காது. அதை காரணம் காட்டி, அவர்கள் கட்டாயம் வெளியேறுவர்.
டவுட் தனபாலு: 'ஆட்சியில்பங்கு' என்ற கோரிக்கையைகாங்., வைத்து, அதை தி.மு.க.,வும் நிராகரிச்சிடுச்சே... ஒருவேளை அந்த கட்சிகள் உங்க பக்கம் வந்தால், கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தர்ற அளவுக்கு இறங்கி போயிடுவீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்அனுபிரியா பட்டேல்: மதுரை எய்ம்ஸ் மருத்துவகல்லுாரியின் மொத்த திட்ட செலவு 2,021 கோடியே 51 லட்சம் ரூபாய் ஆகும். இந்த திட்டத்திற்காக, இதுவரையில், 157 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டும் அல்லாது, மானிய ஊக்கத் தொகையாக, கடந்த மூன்று ஆண்டுகளாக, இத்திட்டத்திற்கு மத்திய அரசு மொத்தம் 64.31 கோடி ரூபாய் நிதி வழங்கி வந்துள்ளது.
டவுட் தனபாலு: அது சரி... மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினாரு... ஆறு வருஷமாகியும் 220 கோடி ரூபாய் தான் நிதி ஒதுக்கியிருக்கீங்க என்றால், தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் நீங்க காட்டும் அக்கறை இவ்வளவு தானா என்ற, 'டவுட்' வருதே!