PUBLISHED ON : ஆக 05, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறிவிடும். அடுத்தும், தி.மு.க., ஆட்சி என்றால், அதில் இடம் வேண்டும் என, காங்., கேட்கிறது. வி.சி.,க்களும், கம்யூ.,க்களும் வெளிப்படையாக ஆட்சிக்கு எதிராக கொடி பிடிக்கின்றனர். அதனால் கூட்டணி கட்சியினர், தி.மு.க.,வை விட்டு வெளியேறக்கூடும். அப்படி நடந்தால், அக்கட்சிகள், அ.தி.மு.க., பக்கம் தான் வருவர். இது, ஆரூடம் அல்ல; நடக்கப் போகிற உண்மை.
டவுட் தனபாலு: தி.மு.க., அல்லது, அ.தி.மு.க.,ன்னு உங்க ரெண்டு பேரை விட்டா வேற, 'சாய்ஸ்' இல்லாம இருந்தது எல்லாம் அந்த காலம்... இப்ப, உங்க ரெண்டு பேருக்கும் மத்தியில, அதிகார நந்தியா வளர்ந்து நிற்கிற, பா.ஜ.,வை நீங்க மறந்துட்டு பேசுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
பத்திரிகை செய்தி: தமிழகத்தில் பசுமை பரப்பை உயர்த்துவதில், பழைய மரங்களை பாதுகாப்பது மிக முக்கியம். அந்த வகையில், அரசுக்கு சொந்தமான நிலங்களில், மரங்களை அனுமதியின்றி வெட்டுவோருக்கு, சிறை தண்டனை உள்ளிட்ட கடும் தண்டனை வழங்கும் வகையில், புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.
டவுட் தனபாலு: வயநாடு நிலச்சரிவு பாதிப்பை பார்த்த பிறகாவது, நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால், நாளைக்கு நமக்கும் அதே அவலம் நேரிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை... ஆகவே, பசுமை பரப்பை பாதுகாக்கும் சட்டத்தை சட்டுபுட்டுன்னு நிறைவேற்றணும் என்பதிலும், 'டவுட்' இல்லை!
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா: லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள், கேள்விகளை மட்டும் கேளுங்கள். அதை விட்டு, கதை சொல்லாதீர். அதனால் சபையின் நேரம் விரயமாகிறது. சபையில், மகாபாரதம் படிப்பது தற்போது அதிகரித்துள்ளது. அதை குறைத்துக் கொள்வது அனைவருக்கும் பலனளிக்கும்.
டவுட் தனபாலு: இதே மகாபாரத கதையை, பா.ஜ.,வுல யாராவது சொல்லியிருந்தா, நீங்களும், 'உம்' கொட்டி கேட்டிருப்பீங்க... ஆனா, சக்கர வியூகம் கதையை, காங்., ராகுல் சொன்னதும், அது ஆளுங்கட்சியினருக்கு எட்டிக்காயா கசந்ததும், அதன் பின் இப்படி ஒரு அறிவுரை உங்களிடம் இருந்து வருவதும் தான் ஏகப்பட்ட, 'டவுட்'களை கிளப்புது!