PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM

தமிழக சிறு, குறு, நடுத்தரதொழில் துறை அமைச்சர்அன்பரசன்: தங்களுக்கு சிறு அளவில் கூட்டம் கூடியதும், நடிகர்கள் முதல்வராக ஆசைப்படுகின்றனர். அதற்காக கட்சி துவங்குகின்றனர். இப்படித்தான், எம்.ஜி.ஆரும், பின் ஜெயலலிதாவும் அரசியலுக்கு வந்தனர். அவர்களுக்கு பின், அரசியலுக்கு வந்த எந்த நடிகரும் சோபிக்கவில்லை. அரசியலில் அவர்கள் ஏன் தோற்கின்றனர் என யோசித்தால், ஒரு உண்மை புரியும். அவர்களுக்கு போதுமான அளவுக்கு அரசியல் அறிவு இருப்பதில்லை என்பதுதான்.
டவுட் தனபாலு: இப்போதைக்குஅரசியல் கட்சி துவங்கி இருப்பதுநடிகர் விஜய் தான்... அவர் இன்னும் களத்துக்கே வரலை... அதுக்குள்ள உங்களுக்கு குளிர் ஜுரம் வந்துடுச்சு என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் 1,200 ரூபாய் மட்டுமே.ஆனால், ஆந்திராவில் 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு அரசு செலவழிக்கும் தொகை, 5,337 கோடி ரூபாய் தான். இந்த திட்டங்களுக்காக, ஆந்திராவில் நடப்பாண்டுக்கு, 33,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில், ஆந்திர அரசை பார்த்து, தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தே.ஜ., கூட்டணியில இருக்காரு... அவரது மாநிலத்துக்கு மத்திய அரசு நிதியை வாரி வாரி வழங்குது... நம்ம மாநிலத்துக்கு அப்படிஇல்லையே... நீங்களும் தே.ஜ., கூட்டணியில் தானே இருக்கீங்க... பிரதமரிடம் பேசி, தமிழகத்துக்கு கூடுதல் நிதியை வாங்கி தந்துட்டு, குறை சொன்னால், 'டவுட்'டே இல்லாமஉங்களை பாராட்டலாம்.
அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி: தலைநகர் சென்னை யின் மையப் பகுதியில் மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், தலைமை செயலகம், துறைமுகம் உள்ளன. போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் கார் பந்தயம் நடத்த வேண்டுமா என, இந்த அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். எப்படி எல்லாம் நம் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது; இது கண்டிக்கத்தக்கது.
டவுட் தனபாலு: சென்னையின் மையப் பகுதியில் கார் பந்தயம்நடப்பதை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்துற உங்க கட்சி, மக்கள் மன்றத்துலயும் போராட்டத்தை துவங்கினால் தான், ஆளுங்கட்சி அசைந்து கொடுக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

