PUBLISHED ON : ஆக 17, 2024 12:00 AM

அகில இந்திய காங்., தலைவர்மல்லிகார்ஜுன கார்கே: தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களிடையே வெறுப்பை பரப்புகின்றனர். நாம் எளிதாக சுதந்திரம் பெற்று விட்டதாக, அவர்கள் பிரசாரம் செய்கின்றனர். ஆனால், சுதந்திரத்தைஅடைவதற்காக, பலர், தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட சிறைவாசம் அனுபவித்தனர்.
டவுட் தனபாலு: சுதந்திரத்துக்காக பணக்கார குடும்பங்கள் மட்டுமில்லாமல், ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள், பெண்கள்னு பலரும் பங்களிப்பு செஞ்சிருக்காங்க... ஆனா, பணக்காரரான நேரு குடும்பத்தை மட்டும் மனசுல வச்சுக்கிட்டு, இந்த கருத்தை நீங்க சொல்வது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: தனியார் துறையில், மூன்று ஆண்டுகளில் 78 லட்சம் வேலை வாய்ப்புகள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.மேலும், 65,483 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. வரும் 2026 ஜனவரிக்குள், 75,000த்துக்கும் அதிகமான அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.
டவுட் தனபாலு: உங்க ஆட்சி அமைந்து, மூணு வருஷம்ஓடிடுச்சு... உங்க தேர்தல் அறிக்கையில், '3.50 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்'னு அறிவிச்சிருந்தீங்க... சொச்சம் இருக்கும் ரெண்டு வருஷத்துல, அதுல பாதி இலக்கையாவது எட்டுவீங்களா என்ற, 'டவுட்' வருதே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக ரயில் திட்டங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில், 875 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட பட்ஜெட்டில், 246 கோடி ரூபாயாககுறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஒருபுறம் மத்தியஅரசு நிதி ஒதுக்கீட்டைகுறைக்கிறது. மறுபுறம், ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தி தராமல், தமிழக அரசு தாமதம் செய்கிறது. மத்திய, மாநில அரசுகள் ஒன்றை ஒன்று குறை கூறுவதை கைவிட்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அது தான் மாநிலத்துக்கும், நாட்டுக்கும் நல்லது.
டவுட் தனபாலு: வாஸ்தவம்தான்... 'விடாக்கண்டன், கொடாக்கண்டன்' கதையாக, பா.ஜ.,வும் - தி.மு.க.,வும் நடத்துற அரசியல் பரமபதவிளையாட்டுல, தமிழகமக்களின் நலன்கள் தான் பின்னுக்கு தள்ளப்படுகிறது என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது...

