PUBLISHED ON : ஆக 24, 2024 12:00 AM

அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை: 'எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி சிறப்பாக நடத்தவில்லை' என, முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். அந்த விழாவில் பிரதமரை பங்கேற்க வைக்கவில்லை எனவும் கூறுகின்றனர். நானும், பழனிசாமி உட்பட சிலரும், மத்திய அரசு சார்பில் சிலரை எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்கு அழைத்தும், அது நடக்கவில்லை.
டவுட் தனபாலு: 'மத்திய பா.ஜ., அரசில் தி.மு.க.,வுக்கு இருக்கும் செல்வாக்கு, எங்க கட்சிக்கு இல்லை' என்ற உங்க பலவீனத்தை நீங்களே பறைசாற்றி விட்டீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பத்திரிகை செய்தி: 'கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை, குத்தகை அடிப்படையில் மட்டுமே தமிழக அரசு கொடுக்கும். இதற்கு முன் விமான நிலையங்கள் ஆணையம் அல்லது மத்திய அரசுக்கு நிலத்தின் உரிமையை மாற்றி தந்தது போல், தர முடியாது' என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள் விதித்து இழுத்தடித்து வந்த தமிழக அரசு, தற்போது, 99 ஆண்டு குத்தகைக்கு இலவசமாக நிலத்தை தருவதாக, விமான நிலைய ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
டவுட் தனபாலு: 'நீங்க, எங்கப்பாவுக்கு நாணயம் வெளியிடுவீங்களாம்... நாங்க, பதிலுக்கு விமான நிலையத்துக்கு நிலத்தை இலவசமா தந்துடுவோமாம்' என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருப்பாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அறிவித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அரியலுார் மாவட்ட தலைவர் கோபால ராமகிருஷ்ணன் என்பவர், முகநுாலில் அருவருக்கத்தக்க வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தார். அவர் மீது, ஹிந்து முன்னணி, போலீசில் புகார் கொடுத்தது; ஆனால், வழக்கு பதியவில்லை. இது குறித்து கேட்ட போது, 'அது அவருடைய கருத்து சுதந்திரம்' என்று சொல்கின்றனர்.
டவுட் தனபாலு: ஆனா, முதல்வர் குறித்தும், ஆட்சி குறித்தும் கடுமையா விமர்சனம் செய்து, சமூக வலைதளங்களில் பதிவுகள் போடுற பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மேல மட்டும் போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துடுறாங்களே... கருத்து சுதந்திரம் அவங்களுக்கு கிடையாதா என்ற, 'டவுட்' வருதே!

