PUBLISHED ON : ஆக 25, 2024 12:00 AM

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் நடிகர் விஜய்: நாட்டின் விடுதலை, மக்கள் உரிமைகளுக்காக, தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நம் அன்னை தமிழ்மொழியை காக்க, உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கைநிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன்.
டவுட் தனபாலு: மொழிப்போர் தியாகிகள் பற்றி எல்லாம் பேசுறீங்களே... மொழிப்போர் பற்றி, தமிழகத்துல இருக்கிற திராவிட கட்சியினரிடம் கேட்டால்,தண்ணீர் குடிக்காமல் மணிக்கணக்கில் பேசுவாங்க... உங்களுக்கு அந்த அளவுக்கு புரிதல் இருக்குதா அல்லது மண்டபத்தில் யாரோ எழுதிதந்ததை படிச்சுட்டீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!
அகில இந்திய காங்., தலைவர்மல்லிகார்ஜுன கார்கே: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தற்போது 13.3 கோடி பேர் தொழிலாளர்களாக உள்ளனர்.அவர்கள் குறைந்த ஊதியம்,குறைந்த வேலை நாட்கள் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இத்திட்டத்திற்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. இது, கிராமப்புற இந்தியாவுக்கு செய்யும் துரோகம்.
டவுட் தனபாலு: ஆனா, இந்த வேலை உறுதி திட்டத்தில் நிறைய மோசடிகள் நடக்கிறதாகவும், பல கிராமங்களில் வேலையே செய்யாமல் பலரும் ஊதியம் வாங்குவதாகவும் நிறைய புகார்கள் வருதே... வேலையே செய்யாம, மக்களின் வரிப்பணத்தை ஊதியமா வாங்குறது துரோகமில்லையா என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: தகுதியற்ற விமானிகளை பயன்படுத்தி, பயணியர் விமானத்தை இயக்கியது, மிக குறைந்த ஊழியர்களுடன் விமானத்தை இயக்கியது உட்பட பல்வேறு விதிமீறல்களில், டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம்ஈடுபட்டதை விமான போக்குவரத்து இயக்குனரகம்கண்டறிந்தது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 90 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: பயணியர் உயிரோடு மட்டுமல்லாமல், தன் நிறுவன ஊழியர்களின் உயிரோடும் சேர்ந்து விளையாடும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் கலாசாரத்துக்கு, நம் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனமான டாடா குழுமமும் பலியாகி விட்டதோ என்ற, 'டவுட்'தான் வருது!

