PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: தமிழகத் தில் எத்தனையோ ஏழை, எளிய மாணவர்கள், திறமையானவர்கள் இருக்கின்றனர். அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் விளையாட்டு போட்டி நடத்தி, மாணவர்களுக்கு உதவலாம். ஆனால், இது ஒரு முதலாளித்துவ அரசு என்பதால், கோடீஸ்வரர் மற்றும் பெரும் பணக்காரர்களுக்காக, 'பார்முலா 4' கார் பந்தயத்தை நடத்தியுள்ளது.
டவுட் தனபாலு: தமிழக மாணவர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு தான் கிரிக்கெட், வாலிபால், கபடின்னு ஆடிட்டு இருப்பாங்க... அவங்கள்ல இருந்து சிறந்த கார் பந்தய வீரர்களை உருவாக்கலாம் என்ற அரசின் தொலைநோக்கு சிந்தனை குறித்து, 'டவுட்' கிளப்புவது சரியா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: திரைப்படத்தில் ஒட்டுமொத்த வாழ்க்கை யின் வளர்ச்சியை, மூன்று மணி நேரத்திற்குள் காட்டுவர்; அதை இன்று நேரில் பார்க்கிறோம். மூன்று ஆண்டுகளில் நடிகர், எம்.எல்.ஏ., அமைச்சர் என வளர்ந்துள்ள உதயநிதி, தற்போது அறிவிக்கப்படாத முதல்வராக செயல்படுகிறார். இந்த வளர்ச்சி அவரது உழைப்புக்கு கிடைத்ததா அல்லது தந்தை, தாத்தா உழைப்புக்கு கிடைத்ததா என்பதை அவரே விளக்க வேண்டும்.
டவுட் தனபாலு: நம்ம பாரம்பரியப்படி தாத்தா, தந்தை உழைத்து சேர்த்த சொத்துக்கள், அவங்க வாரிசுகளுக்கு தானே போகும்... அந்த வகையில் தாத்தா, தந்தையின் உழைப்பு இப்ப உதயநிதியின் அபார வளர்ச்சிக்கு, உபயோகமா இருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங் களில், பா.ம.க.,வுக்கு எட்டு மாவட்ட அமைப்புகள் இருந்தன. இதில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சில நிர்வாகிகள், லோக்சபா தேர்தலின்போது, தி.மு.க.,வினருடன் சேர்ந்து மறைமுகமாக தேர்தல் வேலை பார்த்து, பலன் அனுபவித்ததாக புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக, ரகசிய விசாரணை நடத்திய ராமதாஸ், இந்த மாவட்டங்களின் ஒட்டுமொத்த கட்சி அமைப்புகளையும் கலைத்து, அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
டவுட் தனபாலு: மேற்கண்ட மாவட்டங்கள்ல பா.ம.க., 'லெட்டர் பேடு' அளவில் தான் இயங்கியது என்பதில், 'டவுட்'டே இல்லை... இதனால, அந்த மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமிச்சாலும், பா.ம.க.,வுக்கு பெரிய அளவுல பலன் கிடைக்காது என்பதிலும், 'டவுட்'டே இல்லை!