PUBLISHED ON : செப் 04, 2024 12:00 AM

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்: மத்திய அரசின் சமக்ர சிக்ஷான் திட்டத்துக்கு, ஆண்டுதோறும், 60 சதவீதம் நிதியை மத்திய அரசு வழங்கும். இந்த ஆண்டுக்கான, 2,152 கோடி ரூபாயில் முதல் தவணையாக, 573 கோடி ரூபாயை, கடந்த ஜூன் மாதமே வழங்கி இருக்க வேண்டும். இதுவரை வழங்காததால், பள்ளிக் குழந்தைகளின் கல்வி தரமும், 15,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியமும் கேள்விக்குறியாகும்.
டவுட் தனபாலு: கார் பந்தயத்துக்கு எல்லாம் பல கோடிகளை வாரி விடும் தமிழக அரசு, மாணவர்களின் கல்வியிலயும், 15,000 ஆசிரியர்களின் வாழ்வாதாரத்துலயும், 'ஈகோ' மோதல் நடத்திட்டு இருக்கலாமா... மாநில அரசின்நிதியில திட்டத்தை முடிச்சிட்டு, மத்திய அரசிடம் கேட்டால் குறைஞ்சா போயிடுவீங்க என்ற, 'டவுட்' வருதே!
தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா:பா.ஜ., உறுப்பினராக சேர மொபைல் போனில் இருந்து, 88000 02024 என்ற எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுக்க வேண்டும். தமிழக பா.ஜ.,வில், அடுத்த, 45 நாட்களில், 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
டவுட் தனபாலு: லண்டன் போயிருக்கிற அண்ணாமலை திரும்பி வர்றதுக்குள்ள, தமிழக பா.ஜ.,வில், 1 கோடி உறுப்பினர்களை சேர்த்து, பா.ஜ., தேசிய தலைவர்களை அசத்தணும்னு முடிவு பண்ணிட்டீங்க போலிருக்கு... இதன் வாயிலாக, தற்காலிக பதவியில இருந்து, நிரந்தரமான ஒரு பதவிக்கு நீங்க முயற்சி பண்றது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பத்திரிகை செய்தி: விக்கிரவாண்டியில் வரும், 23ம் தேதி, தமிழக வெற்றிக் கழக மாநாடு நடத்த அனுமதி கோரிய மனு மீது விளக்கம் கேட்டு, அக்கட்சியின் மாநில செயலருக்கு, விக்கிரவாண்டி போலீஸ் எஸ்.ஐ., காத்தமுத்து, 21 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டவுட் தனபாலு: 'அந்த, 21 கேள்விகள்ல பாதிக்கும் மேற்பட்டவை பதில் அளிக்க முடியாததா இருக்கு'ன்னு விஜய் கட்சி நிர்வாகிகள்வெறுத்து போயிருக்காங்களே...பள்ளி தேர்வுல கூட, 'சாய்ஸ்' விட வாய்ப்பு தருவாங்க... ஆனா, போலீசார் கேட்டிருக்கிற கேள்விகளை பார்த்தா, விஜய் கட்சி மாநாட்டை வெளிமாநிலத்துல தான் நடத்தணுமோ என்ற, 'டவுட்' தான் வருது!