PUBLISHED ON : செப் 06, 2024 12:00 AM

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்:கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, அதன் செயல்பாட்டு திறனை உறுதி செய்ய வேண்டும். டேங்கர் லாரிகளில் கழிவுநீரை எடுத்து செல்வதில்,அத்துமீறும் வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். சாய மற்றும் தோல் தொழிற்சாலையில், உப்பு கலவை கழிவை அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும், கல் குவாரிகளை முறையாக ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: இதைஎல்லாம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், 'பாலோ' பண்றாங்களா, இல்லையா தெரியாது... ஆனா, அமைச்சரின்இந்த உத்தரவுகளே, அவங்களுக்கு,'அமுதசுரபி'யாக மாறிடுமோ என்ற, 'டவுட்' தான் வருது!
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலர் சிவலிங்கம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, அரசு அதிகாரிகள் தி.மு.க., மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தோழர்களாகதான் இருப்பர். சிலர்வாகனங்களில் மண் அள்ளிச் செல்கின்றனர். உங்களுக்கு திறமை இருந்தால், நீங்களும் மண் அள்ளிச் செல்லுங்கள்; ஆனால், மாட்டிக் கொண்டால், 'கட்சி காப்பாற்றவில்லை' என, புலம்பக் கூடாது. மற்றபடி,கட்சியினருக்கு எதையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன்.
டவுட் தனபாலு: கட்சியினருக்குஇவ்வளவு பாடம் எடுக்கிற மாவட்ட செயலர், 'மாட்டிக்காம மண் அள்ளுவது எப்படி'என்ற புத்தகம் ஒன்றையும்வெளியிட்டால், ஆளுங்கட்சியினருக்கு இன்னும் அனுகூலமாக இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
இந்திய கம்யூ., கட்சி பொதுச் செயலர் டி.ராஜா: லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பல கட்சிகளின் ஆதரவுடன் தான், பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார். இந்த ஆட்சி எத்தனை நாட்களுக்கு என தெரியவில்லை; இப்போதே ஆட்சியில் முரண்பாடுகள் ஏற்படத் துவங்கி விட்டன. ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகள் கூட, பா.ஜ.,வின் கொள்கைகளை பிடிக்காமல் மாற்றுக் கருத்துகளை கூறி வருகின்றன.
டவுட் தனபாலு: தேசிய ஜனநாயக கூட்டணியில், அந்த அளவுக்கு ஜனநாயகம் இருக்குது...தமிழகத்தில் தி.மு.க., அரசு எது செய்தாலும், ஆமாஞ்சாமிபோடுற உங்க கட்சி மாதிரியே,எதிர் முகாம் கட்சிகளும் இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!