PUBLISHED ON : செப் 08, 2024 12:00 AM

புதுச்சேரி காங்., மூத்ததலைவர் நாராயணசாமி: நடிகர் விஜய் புதிதாக கட்சி துவங்கி இருக்கிறார். கடந்த காலங்களில்சினிமா நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் எதுவும் போணியாகவில்லை. அதை வைத்து தான் இதையும் பார்க்க வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்க சொல்றதும் சரி தான்... ஆனாலும்,எம்.ஜி.ஆர்., என்ற மாபெரும் மக்கள் ஆளுமையை எதிர்த்து அரசியல் களத்தில் நின்ற உங்க கூட்டணி பார்ட்னரான தி.மு.க., இன்று விஜய் கட்சியை கண்டு பயப்படுற மாதிரி தெரியுதே... உங்களுக்கு தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை என்பதால், விஜய் கட்சியைஅசால்ட்டா நினைக்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: தமிழக காங்கிரசில், 60 வயதுக்கு மேல் உள்ள மாவட்ட தலைவர்களை நீக்கிவிட்டு, 50 வயதுக்குள் உள்ளவர்களை அந்த பதவிகளில் நியமிக்க, எம்.பி., ராகுல் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டவுட் தனபாலு: ராகுல் உத்தரவுப்படி, புதியவர்களை மாவட்ட தலைவர்களா நியமிக்கிறது நல்ல விஷயம் தான்... ஆனா, பழம் தின்று கொட்டை போட்ட, 60 வயசுக்கு மேற்பட்ட தலைவர்கள், இளம் தலைவர்களுக்கு கொடுக்குற குடைச்சல்ல, அவங்க துண்டை காணோம், துணியை காணோம்னு ஓட்டம்எடுத்துடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'அ.தி.மு.க.,வுடன் இணக்கம் ஏற்பட்டால்மகிழ்ச்சி தான்' என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன்கூறியுள்ளார். அதிகாரத்துக்குநாங்கள் என்றுமே அடிமையில்லை. எங்கள் கட்சி தலைவர்கள் குறித்து அவதுாறு பேசுகின்றனர். மனசாட்சி உள்ள யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெற்றி - தோல்வி என்பது வேறு. தன்மானத்தை யாருக்காகவும்,எதற்காகவும் விட்டுக் கொடுத்து,எங்கும் இறங்கிப் போக தேவையில்லை. எங்கிருந்தாலும், தன்மானம் தான் முக்கியம்.
டவுட் தனபாலு: அரசியல்ல தன்மானம் எல்லாம் பார்த்தா முன்னேறி போக முடியுமா என்ன...? ஆனாலும், நீங்க இவ்வளவு தன்மானம் பார்க்கிறதால தான், 'தன்மானம் என்றால் கிலோ என்ன விலை'ன்னு கேட்கிறவங்களை, அ.தி.மு.க.,தலைமை பதவிக்கு கொண்டு வர, ஒரு டீம் முயற்சிபண்ணிட்டு இருக்கோ என்ற, 'டவுட்' வருது!