PUBLISHED ON : செப் 14, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புகுழு அமைப்பாளர் ஹெச்.ராஜா: பா.ஜ.,வின் கொள்கை, 'ஊழல் இல்லாத அரசியல்; பொது வாழ்வில் துாய்மை' என்பது. ஆனால் நடிகர் விஜய், 'நீட்' எதிர்ப்பு, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்கிறார். இதைத்தான் திராவிட இயக்கங்களும் சொல்லி வருகின்றன. அந்த வகையில் பார்க்கையில், அவர் பெற போகும் ஓட்டுகள்,திராவிட இயக்க ஓட்டுகள் தான்.
டவுட் தனபாலு: உங்க கொள்கைகள் தமிழகத்துல எடுபடலை என்பதால் தான், 57 வருஷங்களா மாறி மாறி ஆட்சியில அமர்ந்துட்டு இருக்கிற திராவிட இயக்க கொள்கைகளை, நடிகர் விஜய்யும் கையில் எடுத்திருக்காரோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?
பத்திரிகை செய்தி: பா.ஜ.,வில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மைத்ரேயன்,2000ம் ஆண்டு அன்று, அ.தி.மு.க.,வில் இணைந்து, ராஜ்யசபா எம்.பி.,யாகி, தொடர்ந்து பல ஆண்டுகள் எம்.பி., பதவி வகித்தார். ஜெ., மறைவுக்கு பின், பன்னீர்செல்வம் அணியில்இருந்தார்; பின், பழனிசாமி பக்கம் சென்றார்; அதன்பின், பா.ஜ.,வுக்கு சென்றார். தற்போது, மீண்டும் பழனிசாமிமுன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.
டவுட் தனபாலு: ஸ்... அப்பா... படிக்கிற நமக்கே இப்படி மூச்சு முட்டுதே... பாவம், மைத்ரேயன் எப்படி தான் சமாளிக்கிறாரோ... ஆனா, கட்சி தாவும் படலத்தில், காங்., - தி.மு.க., கட்சிகளை மட்டும் ஏன் விட்டு வைத்தார் என்ற, 'டவுட்' எழுதே!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: மதுவிலக்கு கொள்கையுள்ள காந்தி பிறந்த நாளில், மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. இது, தேர்தலுக்காகநடத்தப்படுவது அல்ல. தேர்தல்கணக்கு போட்டு எதையும் செய்ய மாட்டேன். மதுவை ஒழிப்போம் என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க, இடதுசாரிகள் என உடன்பாடுள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டும். பா.ம.க., மற்றும் பா.ஜ., உடன் எப்போதும் அணி சேர முடியாது.
டவுட் தனபாலு: உங்களை விட, மதுவுக்கு எதிராக பல வருஷங்களா குரல் கொடுத்துட்டுஇருப்பவர், டாக்டர் ராமதாஸ்... நியாயப்படி, அவரை தான் இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கவேஅழைச்சிருக்கணும்... இதுல இருந்தே, இந்த மாநாட்டுல தேர்தல் கணக்குகள் இருப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுதே!

