PUBLISHED ON : செப் 15, 2024 12:00 AM

தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன்: அரசியலில் நான் படாத அவமானமா, தோல்வியா,சந்திக்காத எதிர்ப்புகளா? இயக்கத்தில் பிடிப்பு வேண்டும்.இன்றைய இளைஞர்கள் வரும்போதே தடம் பார்த்து அரசியலுக்கு வருகின்றனர். வந்ததுமே, என்ன கிடைக்கும் என, ஆலாய் பறக்கின்றனர். அரசியலுக்கு வரும் இளைஞர்கள் கட்சிக்குள் நுழைந்ததுமே பதவி கிடைக்கும் என, எதிர்பார்க்கக்கூடாது.
டவுட் தனபாலு: 'நான் எல்லாம் பல வருஷம் கடுமையா உழைச்சு தான், இந்த பதவிக்கு வந்திருக்கேன்...ஆனா, மூணு வருஷத்துக்குமுன்னாடி அரசியலுக்குவந்துட்டு, எம்.எல்.ஏ., அமைச்சர்னு 'மளமள'ன்னு உயர்ந்து, அடுத்து துணை முதல்வர்பதவிக்கும் துண்டு போடுறீங்களே'ன்னு உதயநிதிக்கு, 'பஞ்ச்' வைக்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதுவிலக்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்துவதற்காக மாநாட்டை நடத்துகிறார். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என, அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
டவுட் தனபாலு: ஆனா,திருமாவளவன் மாநாடு தமிழகம்முழுக்க பேசுபொருளாகியிருக்கே... அக்., 2ல் தான் அவர் மாநாட்டை நடத்த போறாரு... அதுக்குள்ள நீங்க முந்திக்கிட்டு, பூரண மதுவிலக்கை அறிவிச்சிட்டீங்கன்னா, அவரால மாநாடே நடத்த முடியாதே... அந்த துணிச்சல் உங்களுக்கு வருமா என்பது, 'டவுட்'தான்!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் மது ஒழிப்பு குறித்து பேசுவதற்கு மிகவும் தகுதியான கட்சி பா.ம.க., தான். 7,200 டாஸ்மாக் கடைகளை, 6,800 ஆக குறைத்தது; உச்ச நீதிமன்றம் வரை போராடி, தமிழக நெடுஞ்சாலைகளில், 3,321 மதுக்கடைகளை மூட வைத்தது; 16 மணி நேரவிற்பனை நேரத்தை, 10 மணி நேரமாக குறைத்தது எல்லாம்பா.ம.க.,தான். 2016ல், 'பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு'என அறிவித்த பின்னரே, தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகள் அதை அறிவித்தன.
டவுட் தனபாலு: கடந்த 2016 தேர்தலில் உங்களை பின்பற்றி, பூரண மதுவிலக்கு என்ற வாக்குறுதியை தி.மு.க.,வும் அளித்ததால் தான், அவங்களாலஅந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியலை... 2021 தேர்தலில், அந்த வாக்குறுதியை கைகழுவியதால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வர முடிஞ்சது என்பதில், 'டவுட்'டே இல்லை!