PUBLISHED ON : செப் 17, 2024 12:00 AM

தே.மு.தி.க., துணை பொதுச்செயலர் சுதீஷ்: தே.மு.தி.க., இன்றைக்கும் அ.தி.மு.க., கூட்டணியில் தான் உள்ளது. வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்ட சபை தேர்தலுக்கும் கூட்டணி தொடரும். தே.மு.தி.க., வுக்கு ராஜ்யசபா பதவி கொடுப்பது குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவெடுப்பார்; தேவையானபோது, அது குறித்து நாங்களும் வலியுறுத்துவோம்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் ஒரே கட்சி நீங்க மட்டும் தான்... எப்படியாவது ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டை வாங்கி, பார்லிமென்டுக்குள் நுழைஞ்சுடணும் என்பதற்காகவே, 'உங்க கூட்டணியில் தான் இருக்கோம்'னு, அடிக்கடி அவங்களுக்கு நினைவுபடுத்துறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
கோவை மாவட்ட பா.ஜ., தலைவர் ரமேஷ்குமார்: அன்ன பூர்ணா சீனிவாசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலாவிடம் மன்னிப்பு கேட்டதை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிங்காநல்லுார் மண்டல தலைவர் சதீஷ் தான் அதை செய்தார் என, கண்டறியப்பட்டது. இதையடுத்து, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
டவுட் தனபாலு: 'எய்தவன் இருக்க அம்பை நோவானேன்' என கிராமங்களில் ஒருபழமொழி சொல்வாங்க... முதலில் அந்த வீடியோவை எடுக்க உத்தரவிட்டது யார்னு கண்டுபிடிச்சு, அவங்க மேல நடவடிக்கை எடுக்காம நழுவுவது ஏன் என்ற, 'டவுட்' வருதே!
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ்: புதிதாக கட்சி துவங்கியிருக்கும் நடிகர் விஜய் தனித்து நிற்க மாட்டார். தனி அமைப்பு நடத்தும் நான் தனித்து நின்றால் கூட, எனக்காக ஓட்டு போடக் கூடிய நபர் என் மனைவியாக மட்டும் தான் இருப்பார். இது விஜய்க்கும் நன்கு தெரியும். அதனால், அவர் தனித்தெல்லாம் போட்டியிட மாட்டார்.
டவுட் தனபாலு: தமிழகத்துலயே தனித்து நின்று, தேர்தலில் ஜெயித்தும் காட்டிய ஒரே கட்சி ஜெ., தலைமையில் இயங்கிய அ.தி.மு.க., மட்டுமே... எத்தனையோ இலவச திட்டங்களை வாரி வழங்கும் தி.மு.க., கூட தனித்து நிற்காத சூழல்ல, விஜய் கட்சி தனித்து நின்றால், 'டிபாசிட்' தேறுமா என்பது, 'டவுட்' தான்!

