PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரர் திவாகரன்: பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுத்த பின், தினகரனுடன், பழனிசாமிக்கு மோதல் போக்கு ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண, தனபாலை முதல்வர் ஆக்கலாம் என்று, சசிகலாவிடம் கூறினேன். அதை, திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால், அ.தி.மு.க.,வில் இருந்த, 35 தலித், எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டவுட் தனபாலு: நல்லவேளை நாடு தப்பிச்சது... இல்லன்னா, தனபாலையும் முதல்வராக்கி, அவருக்கும், தினகரனுக்கும் சரிப்பட்டு வராம போயிருந்தா, மாற்றி மாற்றி, அ.தி.மு.க.,வில் இருந்த அத்தனை பேரையும் முதல் வராக்கி, அழகு பாத்திருப்பீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
சிவசேனா கட்சியை சேர்ந்த, மஹாராஷ்டிரா மாநில சுகாதார துறை அமைச்சர் தனாஜி சாவந்த்: சட்டசபையில், தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்களுடன் அருகருகே அமர்ந்தாலும், வெளியே வந்த பின் குமட்டல் ஏற்படுகிறது; எங்களுக்கும், அவர்களுக்கும் கொள்கை
ரீதியாக வேறுபாடு உள்ளது.
டவுட் தனபாலு: உங்க ரெண்டு கட்சிகளுக்கும் கொள்கை ரீதியாக வேறுபாடு இருப்பது, கூட்டணி அமைக்கும் போது தெரியாதா... பதவிக்காக கொள்கையை துாக்கி கடாசிட்டு, குலாவிக்கிட்டீங்க... இன்னும் ரெண்டு, மூணு மாசத்துல சட்டசபைக்கு தேர்தல் வர்றதால, கொள்கை, புடலங்காய்னு வெட்டி நியாயம் பேசுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
மஹாராஷ்டிராவில் செயல்படும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் உமேஷ் பாட்டீல்: தேசியவாத காங்.,கை அவமதிக்கும் வகையில், தனாஜி சாவந்த் தொடர்ந்து செயல்படுகிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால், நாம் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். கூட்டணி தர்மத்துக்காகவே அமைதியாக இருக்கிறோம். அவரின் குமட்டலுக்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தான் சிகிச்சை செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: யாரு வந்து என்ன சிகிச்சை பண்றது... இன்னும், ரெண்டு, மூணு மாசத்துல மஹாராஷ்டிராவுல சட்டசபை தேர்தல் நடக்க போகுது... பதவிக்காக, பொருந்தா கூட்டணி அமைச்சிருக்கிற உங்களுக்கு சிகிச்சை அளிக்க, மஹாராஷ்டிரா மக்கள் காத்துட்டு இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!