PUBLISHED ON : பிப் 23, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா: முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட யாருமே கருணாநிதிக்கு மரியாதை தருவதில்லை. சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது கருணாநிதி தானே. ஏன், தி.மு.க.,வினர் தங்கள் குழந்தைகளை சமச்சீர் கல்வி திட்டத்தில் படிக்க வைக்க வேண்டியது தானே. பிரதமர் மோடியை தி.மு.க.,வினர் அவதுாறாக பேசுகின்றனர். நாங்கள் நினைத்தால் தி.மு.க., ஆட்சிக்கே, 'கெட் அவுட்' சொல்லி விடுவோம்.
டவுட் தனபாலு: இதே கருணாநிதி, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தையும் முன்பு ஆதரிச்சு எழுதியிருக்காரே... அதையே இன்றைய தி.மு.க.,வினர் ஏத்துக்கலையே... அது போகட்டும்... 'புதிய கல்விக் கொள்கையை தி.மு.க., அரசு ஏத்துக்கலை என்றால், அரசியல் சட்டம் 356வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைச்சிடுவோம்'னு மிரட்டுறீங்களா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு, 1.55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகளில் எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. ஏன் என்று கேட்டால், மத்திய அரசு 2,500 கோடி ரூபாய் தரவில்லை என்று, பொய்யாக கூறுகின்றனர்.
டவுட் தனபாலு: அதானே... 1.55 லட்சம் கோடி ரூபாயில் செய்யாத பணிகளையா, இந்த 2,500 கோடி ரூபாய்ல செய்துட போறாங்களாம்... மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மட்டும், மாநில அரசு பணத்தை போட்டு மளமளன்னு வேலை பார்த்த மாதிரி, கல்விக்கும் செஞ்சிருக்கலாமே... மத்திய அரசு மீது பழிபோட கிடைச்ச வாய்ப்பை விடக்கூடாதுன்னு நினைக்கிறாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக துணை முதல்வர் உதயநிதி: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நிதி பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார். தனியார் பள்ளிகள் சட்டவிரோதமாக நடத்தப்படவில்லை; மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்றுதான் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளியில், இலவச உணவு, சீருடை எல்லாம் வழங்கப் படுவது இல்லை. அதனால், தனியார் பள்ளியை அரசு பள்ளியுடன் ஒப்பிடக்கூடாது.
டவுட் தனபாலு: 'தனியார் பள்ளியில் இலவச உணவு, சீருடை எல்லாம் தர மாட்டாங்க... அதனால, அந்த பிள்ளைகள் ஹிந்தி, சமஸ்கிருதம்னு எந்த மொழியையும் படிச்சு முன்னேறி போகட்டும்... இலவச உணவும், சீருடையும் வாங்குற ஏழை, பாழை மாணவர்கள் தமிழ் மட்டும் படிச்சுட்டு, எங்களுக்கு ஓட்டு போடும் அடிமைகளா உருவாகணும்'னு சொல்லாம சொல்றாரோ என்ற, 'டவுட்'தான் வருது!

