PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: கடந்த, 1999ல், ஐந்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்கி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சில மாதங்களிலேயே, 'அந்த அரசாணை செல்லாது' என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரணைக்கு கொண்டு வர, தமிழக அரசு 25 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 10ம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்கி, 2006ல் அன்றைய முதல்வர் கருணாநிதி சட்டம் கொண்டு வந்தார்; அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
-டவுட் தனபாலு: தன் தந்தை கருணாநிதி போட்ட அரசாணை, சட்டத்தையே அமல்படுத்த, தனயன் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கலை... அவற்றை அமல்படுத்தினால், தி.மு.க., பிரமுகர்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் பாதிக்கப்படும் என்று பேசாம இருந்துட்டாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய, சென்னை மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலர் சிற்றரசு: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின், நம் கட்சிக்கு இளைஞர்கள் வருகை குறைந்து விட்டது. என் கணக்குப்படி, அவரது கட்சிக்கு, 18 சதவீதம் ஓட்டுகள் வரை, இந்த மாவட்டத்தில் கிடைக்கும் என தெரிகிறது. அது புரியாமல், நம் கட்சி நிர்வாகிகள் இருக்கின்றனர். ஆளுங்கட்சியாக இருக்கும்போதே, இந்த நிலைமை என்றால், எதிர்க்கட்சியானால், நம் கட்சியினர் எப்படி செயல்படப் போகின்றனரோ தெரியவில்லை.
டவுட் தனபாலு: பொதுவாக, தி.மு.க., எதிர்க்கட்சியாக இருக்கும் போது தான், வீரியமாக பணியாற்றும்னு சொல்லுவாங்க... அந்த வகையில, '2026 சட்டசபை தேர்தலுக்கு அப்புறம் கண்டிப்பா, தி.மு.க., எதிர்க்கட்சி ஆகிடும்' என்பதை, 'டவுட்'டே இல்லாம ஒப்புக் கொள்கிறாரோ?
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன்: தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்யும் கேலிக்கூத்துகள் அளவின்றி போகின்றன. திடீரென்று, 'செருப்பில்லாமல் நடப்பேன்' என்று சொல்லி, கால்களில், 'ஷூ' அணிந்து வலம் வருவது, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்வது போன்ற அவரது நடவடிக்கைகளை கண்டு, நாடே எள்ளி நகையாடுகிறது.
டவுட் தனபாலு: அது சரி... கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், 'டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடு'ன்னு சொல்லி, இன்றைய முதல்வரும், துணை முதல்வரும், தங்கள் வீட்டு வாசலில் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய கேலிக்கூத்துகளை எல்லாம் பார்த்த தமிழக மக்களுக்கு, அண்ணாமலையின் செயல், கேலிக்கூத்தா தெரியுமா என்பது, 'டவுட்' தான்!