PUBLISHED ON : மார் 01, 2025 12:00 AM

இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: மத்திய அரசின் தவறு களை லோக்சபாவில் அம்பலப்படுத்துவதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில்இருக்கின்றனர். அவர்கள் குரலைஒடுக்க வேண்டும் என, தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது. இது கண்டிக்கத்தக்க செயல். இதை அனுமதிக்க முடியாது.
டவுட்: தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பார்லி.,யில் வாய் திறந்தால், அங்கே தமிழ்ல சிங்கமா சீறும் நிர்மலா சீதாராமன், 'லெப்ட் அண்டு ரைட்' குடுத்திட்டிருக்காங்களே... அதை தமிழக, 'டிவி'க்கள் காட்டுறது இல்லே... ஆனா, 'யு டியூப்' சேனல்கள்லாம் வெளுத்து வாங்குறாங்களே... அதை யாரும் இங்கே பார்க்க மாட்டாங்கன்னு நீங்க நினைச்சிட்டீங்களோன்னு, 'டவுட்' வருதுங்க!
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்:கோரிக்கைகளுக்காக போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நினைப்பது நியாயமில்லை. கடந்த சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்.
டவுட்: உங்க அப்பா மூப்பனார், தன் கட்சித் தலைவி சோனியாவை எதிர்த்து, தி.மு.க.,வை எதிர்த்து, வலுவா நின்னவரு... அவரைப் போல தர்ணாவெல்லாம் செய்ய வேண்டாம்... அட்லீஸ்ட் உங்க ஆட்களைத் திரட்டி, 1 கி.மீ., துாரத்துக்கு மனித சங்கிலியாவது போடலாமே... இப்படி வெறும் அறிக்கை மட்டும் வெளியிட்டு அரசியல் செய்யிறதெல்லாம் இனி வேலைக்கு ஆகாதுங்கிறதுல, 'டவுட்'டே இல்லே!
தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க., இடம்பெற்ற பின்தான், அன்புமணி மத்திய அமைச்சராக பதவி ஏற்றார். அதற்கு சோனியா, கருணாநிதி பரிபூரண ஆசீர்வாதம் தான் காரணம். சோனியா, அன்புமணிக்கு மிகப்பெரிய மரியாதை தந்தார். காங்கிரஸ் பெண் எம்.பி.,யான சுதாவும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான். அவரை நக்கல், நைாயாண்டி செய்துள்ளீர்கள். அவரை மட்டும் அவமானப்படுத்தவில்லை; வன்னியர் சமுதாயத்தை தான் இழிவுபடுத்தி உள்ளீர்கள்.
டவுட்: போச்சுடா... 'பா.ம.க.,வும், தி.மு.க.,வும் ஒண்ணா சேர்ந்துச்சுன்னா, நமக்கு சிக்கலாச்சே'ன்னு யோசிச்சு, மெதுவா காய் நகர்த்துறீங்களோ... அதுசரி, உங்க மாநில தலைவர் தானே, இங்கே பேசணும்... உங்களைப் பேச வச்சு வேடிக்கை பார்க்கிறதைப் பார்த்தா, உங்க பதவிக்கு, 'ஆப்பு' அடிக்க போறது மாதிரி, 'டவுட்' வருதே... உங்களுக்கு வரலையா?