PUBLISHED ON : மார் 08, 2025 12:00 AM

பிரதமர் நரேந்திர மோடி: டில்லியில் வலுவான, திறமையான, உறுதியான அரசு அமைய, அம்மாநில மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். டில்லி மக்களின் வாழ்க்கையை மாற்றவும், மாநிலத்தின் விரிவான வளர்ச்சிக்கும் புதிய பா.ஜ., அரசு, ஏற்கனவே உறுதியுடன் செயல்படத் துவங்கி உள்ளது. டில்லியை உலகின் சிறந்த தலைநகராக மாற்ற, அனைத்து விதமான முயற்சிகளையும் எடுப்போம்.
டவுட் தனபாலு: டில்லியின் தலையாய பிரச்னை காற்று மாசு தான்... கடந்த 10 வருஷமா அந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாம, உங்க கட்சியும், ஆம் ஆத்மியும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியே காலத்தை கடத்திட்டீங்க... அதனால, காற்று மாசு பிரச்னைக்கு உறுதியான, இறுதியான தீர்வை எடுத்தால், டில்லி மக்கள் பா.ஜ.,வுக்கு தொடர் வெற்றிகளை தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை குறித்த நேரத்தில் தேர்வு செய்யவே, ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே ஒரு ஆசிரியரைக்கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால்,அந்த வாரியம் எதற்காக இருக்க வேண்டும்; அதை மூடி விடலாமே? அரசு பள்ளிகள் மீது அரசுக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்தால், ஆசிரியர் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும்.
டவுட் தனபாலு: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைஞ்சிட்டே வருதுன்னு ஒருபக்கம் சொல்றாங்க... அதனால, எதுக்கு ஆசிரியர்களை நியமித்து, வெட்டியா சம்பளம் தரணும்னு நினைக்கிறாங்களோ... நீங்க சொல்ற மாதிரி, வாரியத்தை இழுத்து மூடுனா, அங்க வேலை பார்க்கிற அதிகாரிகள், ஊழியர்களின் சம்பளமாவது அரசுக்கு மிஞ்சும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ.,வைச் சேர்ந்த, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்: சமாஜ்வாதி கட்சியின் மஹாராஷ்டிரா எம்.எல்.ஏ., அபு அசிம் அஸ்மி, சத்ரபதி சிவாஜியின் ஆட்சி குறித்து வெட்கப்படுவதாகவும், முகலாய ஆட்சியாளர் அவுரங்கசீப்பை நாயகனாக கருதுவதாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற நபர்கள் இந்தியாவில் வாழலாமா? அவரை உ.பி., அனுப்பி வையுங்கள்; மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
---------டவுட் தனபாலு: உ.பி.,யும் இந்தியாவுக்குள்ள தானே இருக்குது... அதனால, அபு அசிம் அஸ்மியை அங்க கூப்பிடுறதுக்கு பதிலாக,பக்கத்து நாடான பாகிஸ்தானுக்கே பார்சல் பண்ணிடலாம்...அதுதான் அவருக்கும், நமக்கும்,நாட்டுக்குமே நல்லது என்பதில், 'டவுட்'டே இல்லை!