/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கிண்டல் செய்தவங்க ஆச்சரியமாக பார்க்கின்றனர்!
/
கிண்டல் செய்தவங்க ஆச்சரியமாக பார்க்கின்றனர்!
PUBLISHED ON : ஏப் 26, 2024 12:00 AM

அரசு வேலையை உதறி, ஆட்டு பண்ணை நடத்தி வரும் தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார்:
கடந்த 2009ல், தேர்வெழுதி இரண்டாம் நிலை காவலராக சேர்ந்தேன். அப்படியே 10 ஆண்டுகள் ஓடிடுச்சு. வேலை பளு அதிகமாச்சே தவிர, சம்பளத்தில் பெருசாக மாற்றம் இல்லை. அந்த நேரத்தில் தான் வேலையை விட்டுட்டு சொந்தமாக தொழில் பண்ண முடிவெடுத்தேன்.
அதனால், உடற்பயிற்சி மையம் வைக்கலாம்னு முடிவு பண்ணி தஞ்சாவூரில் துவங்கினேன். அடுத்து, இன்னொரு தொழிலும் இருந்தால் கூடுதல் வருமானத்துக்கு உதவியாக இருக்கும்னு நினைச்சேன். வேற என்ன தொழில் செய்யலாம்னு யோசிக்கும்போது தான் ஆட்டு பண்ணை துவங்கும் யோசனை வந்தது.
கொடி ஆடு, சேலம் கருப்பு என்ற இரண்டு வகையான நாட்டு ஆடுகள் வளர்த்துக்கிட்டு இருக்கேன். இந்த ஆடுகளுக்கு தேவையான பசுந்தீவனமும் பயிர் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
கறிக்கடைகளுக்கு கொடுக்காமல் நாமளே நேரடியாக மக்கள்கிட்ட விக்கணும்னு முடிவெடுத்தேன். சோஷியல் மீடியாக்களில் என் பண்ணையை பற்றியும், நாட்டு ஆடுகள் வளர்ப்பு முறைகள் பற்றியும் நிறைய வீடியோ பதிவு செய்தேன்.
அதை பாத்துட்டு தீபாவளி, பொங்கல், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும், கோவில் திருவிழாக்களில் நடக்கும் கிடா வெட்டு, கல்யாணம், காது குத்து மாதிரியான வீட்டு விசேஷங்களுக்கும் என் பண்ணையை தேடி, மக்கள் வர துவங்கினர்.
பொதுவாக, 2-3 மாதங்களுக்கு ஒரு முறை, 10- - 15 கிலோ எடையுள்ள சின்ன ஆடுகள், 40 வாங்குவேன். ஒரு ஆடு ஒரு மாதத்திற்கு இரண்டரை முதல் 3 கிலோ வரை எடை ஏறும் அளவுக்கு தீவனம் கொடுப்பேன்.
ஒரு கிடா, அடுத்த ஆறு மாதத்தில் விற்பனைக்கு தயாராக இருக்கும் போது, சராசரியாக 30 கிலோ எடை இருக்கும். 1 கிலோ உயிர் எடை, 500 ரூபாய் என, விற்பனை செய்வது வாயிலாக, 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
ஒரு ஆண்டிற்கு, 120 ஆடுகள் விற்பனை செய்வது வாயிலாக, மொத்தம் 18 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். பராமரிப்பு, தீவனம் உட்பட எல்லா செலவுகளும் போக, ஆண்டிற்கு, 8.20 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது.
நான் ஏற்கனவே பார்த்த போலீஸ் வேலையில் மாசத்துக்கு, 40,000 ரூபாய் சம்பளம். ஆண்டிற்கு, 4.80 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஆனால், நேரம், காலம் பார்க்காமல் உழைக்கணும்.
நேரத்துக்கு சாப்பிட முடியாது, துாங்க முடியாது. அதே உழைப்பை இங்கே போட்டு, இரண்டு மடங்கு வருமானம் ஈட்டிக்கிட்டு இருக்கேன். 'அரசாங்க வேலையை விட்டுட்டு ஆடு மேய்க்கிறியா'ன்னு கிண்டல் பண்ணவங்களெல்லாம் இப்போது ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
தொடர்புக்கு:
95000 29243

