PUBLISHED ON : ஜூலை 15, 2011 12:00 AM

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்: குண்டு வெடிப்புகளில் இருந்து, மும்பை மக்கள் விரைவாக மீண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இருந்தாலும், குண்டு வெடிப்பு நடந்த இடங்களிலிருந்து, செய்தி ஒளிபரப்பிய மீடியாக்களின் நடவடிக்கை சரியானது அல்ல. துயரமான சம்பவம் நடக்கும்போது, அதுபற்றிய விளக்கமான தகவல்களை வெளியிடும் மீடியாக்களின் நடவடிக்கை மோசமானதாக உள்ளது.
டவுட் தனபாலு: மோசமா தான் இருக்கும்... 21 பேர் செத்த பிறகும், 'மும்பையில வெடிச்சது வெங்காய வெடி தான்'னு செய்தி வெளியிட்டா தான் உங்களுக்கெல்லாம் நல்லா இருக்கும்... அப்போ தான் உங்களை மாதிரி நட்சத்திரங்கள், கோடி கோடியா காசு வாங்கிட்டு, அடுத்த ஷூட்டிங்குக்கு ஹாயா போக முடியும்...!
அமெரிக்க ராணுவ தலைமையக செய்தித் தொடர்பாளர் டேவ் லாபன்: பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவி ரத்தாகிவிட்டது என்று சொல்ல முடியாது; நிறுத்தி வைத்திருக்கிறோம். எங்களது ராணுவ வீரர்களை திருப்பி அனுப்பியது, விசா கொடுக்க மறுத்தது உள்ளிட்ட விஷயங்களில் எங்களுக்கு சாதகமான முடிவுகளை பாகிஸ்தான் எடுத்தால், நிதியுதவி வழங்குவது தொடரும்.
டவுட் தனபாலு: பால் வார்க்கிறதே பாம்புக்கு... இதுல, 'மகுடிக்கு ஏற்றபடி ஆடினால், தொடர்ந்து பால் ஊற்றப்படும்'னு பெருமை வேற... நேத்து மும்பையில வெடிச்சது, மீண்டும் வாஷிங்டன்ல வெடிக்கிறதுக்கு ரொம்ப நேரம் ஆகாதுன்னு, எப்போ தான் புரிஞ்சுப்பீங்களோ...!
அமெரிக்க அதிபர் பராக் உசேன் ஒபாமா: அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக, இந்தியா உள்ளது. மும்பை பயங்கரத்துக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த, இந்தியாவுக்கு துணைபுரிவோம். இந்த மோசமான பயங்கரவாத தாக்குதலில் இருந்து இந்தியா, தானாகவே மீண்டுவரும் என்ற நம்பிக்கை உள்ளது.
டவுட் தனபாலு: வேற வழி...? 'இவன் எவ்வளவு அடிச்சாலும், வலிக்காத மாதிரியே நடிக்கிறாண்டா... இவன் ரொம்ப நல்லவண்டா'ன்னு பயங்கரவாதிகளுக்கே தெரிஞ்சிருக்கு... முதுகெலும்பில்லாத அரசியல் தலைமையும், உங்களை மாதிரி பாகிஸ்தானை மறைமுகமா ஆதரிக்கிறவங்களும் இருக்கிற வரை, இப்படி கொத்துக் கொத்தா செத்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்...!