PUBLISHED ON : செப் 28, 2011 12:00 AM

பத்திரிகைச் செய்தி: மதுரை மேயர் வேட்பு மனு தாக்கலுக்கு, வேட்பாளருடன் அழகிரி வந்தார்.
தேர்தல் அலுவலர் நடராஜனின் அறையில் நுழைந்ததும், நிருபர்களை வெளியில் இருக்குமாறு அழகிரி கூறினார். தேர்தல் அலுவலர், 'அவர்கள் இருக்கட்டும்' என்றார். 'தனியாக பேச வேண்டும்' என, அழகிரி கூறியதற்கு, 'அதற்கு இது நேரமல்ல, பின்னர் கட்டாயம் பேசலாம்' என்றார் நடராஜன்.
டவுட் தனபாலு: ஆட்சியில இல்லாதபோதே இப்படி... அதுலேயும் இருந்திருந்தா...? 'நோ கமென்ட்ஸ்...!'
தி.மு.க., தலைவர் கருணாநிதி: ஸ்பெக்ட்ரம் வழக்கு முடிந்த பிறகு, நான் டில்லி சென்று சோனியாவை நிச்சயமாக சந்திப்பேன். ஏனென்றால், நான் மனிதநேயம் உள்ளவன்; மனிதாபிமானம் உள்ளவன்; தோழமைக் கட்சியின் தலைவரை எந்தளவுக்கு மதிக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவன்.
டவுட் தனபாலு: 'சோனியா மாதிரி கல்நெஞ்சக்காரன் அல்ல'ன்னு சொல்லி முடிச்சுடுங்க... எவ்வளவோ சொல்லிட்டீங்க... அதை மட்டும் சொல்றதுல என்ன தயக்கம்...?
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட் இணைந்து மூன்றாவது அணி அமைந்துள்ளது. இந்த நட்பு மேலும் வளர்ந்து, வருங்காலங்களிலும் நீடிக்க வேண்டும். வேறு சில கட்சிகள் இணைவதற்கான காலம் மிக குறைவாகவே உள்ளது. இருப்பினும், வரும்பட்சத்தில் இணைத்துக்கொள்வோம்.
டவுட் தனபாலு: நல்ல முயற்சியை ஆரம்பிச்சிருக்கீங்க... அபசகுனமா எதுவும் சொல்லக் கூடாது தான்... இருந்தாலும், 1996ல, ம.தி.மு.க.,வோட மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைச்சதும், அதன் பிறகு, ம.தி.மு.க.,வுக்கு நேர்ந்த கதியும் ஞாபகம் வந்து தொலைக்குதே...!