PUBLISHED ON : ஜன 06, 2025 12:00 AM

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன்: மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில மாநாட்டு பேரணிக்கு அனுமதி கேட்டோம், மறுத்து விட்டீர்கள்; செங்கொடி பேரணிக்கும் தடை விதித்தீர்கள். இதன் மீதெல்லாம் ஏன் உங்களுக்கு அச்சம். கூட்டணி ஆட்சியில் நாங்கள் இல்லை. நிறைவேற்றாத திட்டங்களுக்கு, தி.மு.க., அரசு தான் பொறுப்பு. தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான அடக்குமுறை அதிகமாக உள்ளது. இதற்காக, தி.மு.க., எங்களை விமர்சிக்கலாம்; அதை சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
டவுட் தனபாலு: 'யார் அந்த சார்'னு திருமாவும் ஒரு பக்கம் கேட்க ஆரம்பிச்சிட்டாரு... நீங்களும் ஆளுங்கட்சியை கடுமையா விமர்சிக்க ஆரம்பிச்சுட்டீங்க... எல்லாரும் பேசி வச்சுக்கிட்டு, கூட்டணி மாற்றத்துக்கு, 'ரூட்' போடுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், செல்லுார் ராஜு: பழனிசாமி தலைமையில் தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, பொங்கல் தொகுப்புடன் பரிசு தொகையாக, 2,500 ரூபாய் வழங்கினோம். அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், 'விலைவாசி அதிகமாகி இருப்பதோடு, மக்கள் சந்தோஷமாக பொங்கல் கொண்டாடுவதற்கு ஏற்ப, 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். ஆனால், இன்றைக்கு பொங்கல் பரிசு தொகையாக எதையுமே அரசு வழங்கவில்லை.
டவுட் தனபாலு: சரி, விடுங்க... 2027 பொங்கல் பண்டிகைக்கு, '10,000 ரூபாய் வழங்கணும்'னு தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உங்களுக்கு கோரிக்கை வைப்பார் பாருங்க... இதன் உள் அர்த்தம், சீனியர் அரசியல்வாதியான உங்களுக்கு, 'டவுட்' இல்லாம புரிஞ்சிருக்குமே!
இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டும், தனித்தனியாகவும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும் போராடி வந்துள்ளோம். அதில் பல சாதனைகளையும் கண்டுள்ளோம். தமிழகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. இனி வரும் காலங்களிலும் இணைந்து பணியாற்றுவேம்.
டவுட் தனபாலு: நீங்க ரெண்டு கட்சிகளும் இணைந்து செயல்பட்டு, இதுவரைக்கும் எந்த முன்னேற்றத்தை தமிழகத்துக்கு கொண்டு வந்தீங்கன்னு பட்டியல் போட முடியுமா... ஒரே கூட்டணியில இருப்பதில் மட்டும் தான் ரெண்டு கட்சிகளும் இணைந்து செயல்படுறீங்க என்பது தான், 'டவுட்'டே இல்லாத உண்மை!

