PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: தமிழக கவர்னர் ரவி, கலகத்தையும், பதற்றத்தையும் உருவாக்க வேண்டும்; தன் பெயர் பத்திரிகையில் வர வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் சட்டசபைக்கு வருகிறார். கடந்த சட்டசபை கூட்டங்களில், அறிக்கையில் இல்லாதவற்றை படித்த அவர், 6ம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தில் தான் வாசிக்க வேண்டிய உரையையும் வாசிக்கவில்லை.
டவுட் தனபாலு: நீங்களும்தான், ஆளும் கூட்டணியில் இருந்தாலும், அடிக்கடி அரசை கண்டித்து பேசுறீங்க... போராட்டம் எல்லாம் கூட நடத்துறீங்க... உங்க பெயரும் பத்திரிகைகளில் வரணும்னு தான் அப்படி எல்லாம் பண்றீங்களா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மக்களின் கவனத்தை தி.மு.க., அரசின் நிர்வாகத் தோல்வியில் இருந்து திசை திருப்ப வேண்டாம் என்றும் முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். விதி மற்றும் நடைமுறைகளை பின்பற்றுமாறு மட்டுமே, சட்டசபையில் அரசை கவர்னர் கேட்டு உள்ளார். இதை ஒரு பெரிய சச்சரவாக்க முயற்சிப்பது, தி.மு.க., அரசின் தோல்விகளை மடைமாற்றுவதற்காகவே என்பது வெளிப்படையாக தெரிகிறது.
டவுட் தனபாலு: கவர்னர் - தமிழக அரசு மோதல் செய்திகள் முன்னுக்கு வந்து, மாணவி பாதிப்பு சம்பவம் பின்னுக்கு போயிடுச்சு பார்த்தீங்களா...? ஆளுங்கட்சி இதை எதிர்பார்த்திருந்த சூழல்ல, அதற்கு கவர்னரும் தீனி போட்டிருக்க வேண்டாம் என்ற உங்க ஆதங்கம், 'டவுட்'டே இல்லாம தெரியுது!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: எங்கள் கட்சியின் பொதுச்செயலர் ரவிகுமாருக்கு இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் விருதை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதற்காக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தோம். அண்ணா பல்கலை விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைவிட, இதை வைத்து அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
டவுட் தனபாலு: ரவிகுமாருக்கு விருது கொடுத்ததுக்கே, பல்கலை மாணவி விவகாரத்துல, 'யு டர்ன்' போட்டுட்டீங்க... உங்களுக்கு விருது கொடுத்திருந்தால், 'பல்கலையில அப்படி ஒரு சம்பவமே நடக்கலை'ன்னு சொல்லிடுவீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

