PUBLISHED ON : நவ 11, 2026 12:00 AM

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: தமிழகத்தில் அரிசி முதல், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து விட்டன. த.வெ.க., அரசில் புதிய தலைமை செயலகம் கட்டுவதாக அறிவித்தனர். கடும் எதிர்ப்பின் காரணமாக அது நிறுத்தப்பட்டுள்ளது. தலைமை செயலகம் எங்கே வரப்போகிறது என எதுவும் தெரியவில்லை.
டவுட் தனபாலு: விலைவாசி உயர்வு என்பது நாடு தழுவிய பிரச்னை... பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்ட முயன்றாலும் எதிர்க்கிறீங்க... சரி வேற இடம் பார்க்கலாம்னு அரசு அவகாசம் எடுத்துக்கிட்டாலும் விமர்சிக்கிறீங்க... தினமும் த.வெ.க., அரசை திட்டி, உங்க கூட்டணி தலைமையான தி.மு.க.,விடம் நல்ல பெயர் எடுக்க பார்க்கிறீங்களோ என்பது, ‘டவுட்’ இல்லாம புரியுது!
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: சென்னை செங்குன்றத்தில், கஞ்சா போதையில் ஒரு வாலிபர் பொதுமக்களை தாக்கியதோடு, தடுக்க வந்த போலீஸ் எஸ்.ஐ.,யை கத்தியால் வெட்ட துணிந்த சம்பவம், பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. எஸ்.ஐ.,யே உயிரை காப்பாற்றிக் கொள்ள கடும் போராட்டத்தில் ஈடுபடும் நிலைமைக்கு தள்ளப் பட்டிருப்பது, தமிழகத்தில் சட்டம்- – ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்து போயுள்ளது என்பதற்கான சான்று.
டவுட் தனபாலு: போலீஸ் அதிகாரியையே வெட்டும் அளவுக்கு, அந்த வாலிபரின் மூளையை கஞ்சா போதை பாதிச்சிருக்கு... அந்த வாலிபருக்கு கடும் தண்டனை தரணும் என்பதில், ‘டவுட்’டே இல்லை... அதேநேரம், அவருக்கு கஞ்சா கிடைக்கும் வழிகளையும் கண்டு பிடிச்சு, அவற்றை அடைக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கணும் என்பதிலும், ‘டவுட்’டே இல்லை!
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல் குமார்: தேனி மாவட்டம், மேகமலை யில் பட்டு காட்டன் தொழிலை நம்பி, 30 ஆயிரம் பேர் உள்ளனர். 2009ம் ஆண்டு, அப்போதைய தி.மு.க., அரசால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மேகமலை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2022ல் மேகமலையில் வசிப்போரை வெளியேற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கில், இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
டவுட் தனபாலு: நாட்டில் சுற்றுச் சூழல் சீர்கேடுகள் அதிகரிச்சிட்டே வர்ற சூழலில், வனங்களை பாதுகாப்பது ஒன்று தான், எதிர்கால தலைமுறைக்கு நாம் விட்டு சொல்லும் பெரிய சொத்தாக இருக்கும்... அதனால, வனங்களையும் பாதுகாக்கணும்; மக்களையும் வெளியேற்றக் கூடாது என்ற இரட்டை குதிரை சவாரியை கைவிட்டுட்டு, துணிச்சலா ஒரு முடிவை எடுக்கணும் என்பதில், ‘டவுட்’டே இல்லை!
