PUBLISHED ON : செப் 19, 2024 12:00 AM

பா.ஜ.,வை சேர்ந்த, பார்லிமென்ட் விவகார துறை இணை அமைச்சர் முருகன்: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை குறைப்போம்' என்றனர். அதற்கு பதில் கடைகளின் எண்ணிக்கையை அதிகமாக்கி உள்ளனர். அப்போதும், திருமாவளவன் கூட்டணியில் தான் இருந்தார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு இருவரையும் அனுப்பி இருக்கலாமே. அவர்கள்மூத்த தலைவர்கள் தானே; அவர்களை ஏன் அனுப்பவில்லை?
டவுட் தனபாலு: தி.மு.க., நடத்தும் எத்தனையோ மாநாடுகளுக்கு, 'ஸ்பான்சர்' செய்யும்அவங்களை, மது ஒழிப்பு மாநாட்டுக்கு எப்படிஅனுப்புவாங்க... அவங்க விரலை வச்சே, அவங்க கண்ணை குத்த நீங்க ஐடியா கொடுப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு, மக்களை ஏமாற்றும் செயல். 500 மதுக்கடைகளை மூடியதாககூறும் அரசு, 'எப்.எல்.2' உரிமம்வழங்கி, 1,000 மது கிளப்களைதுவக்கியுள்ளது. பீஹாரில் மது விலக்கு சாத்தியம் எனில், தமிழகத்தில் மட்டும் ஏன் முடியாது?
டவுட் தனபாலு: அதானே... மயிலாப்பூரில் ஒரு கடையை மூடினால், மந்தைவெளியில் ரெண்டு கடையா திறக்குறாங்களே...தமிழகத்துலயும் மதுவிலக்கு சாத்தியம் தான்... ஆனாலும், அதை அமல்படுத்தும் எண்ணம் ஆட்சியாளர்களுக்கு நிஜமாவே இருக்கா என்பது தான், 'டவுட்!'
தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன்: மது ஒழிப்பு என்பதை பல்வேறு கட்சிகளும் வலியுறுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. தமிழகத்தில் மது ஒழிப்பு கொண்டு வந்தால், மது பிரியர்கள் அண்டை மாநிலங்களில் சென்று மது வாங்கும் சூழல் ஏற்படும். எனவே, மது ஒழிப்பு என்பது தமிழகம் மட்டுமன்றி, தேசிய அளவில் அமல்படுத்த வேண்டிய ஒன்று. மேலும், மது ஒழிப்பு என்பதை படிப்படியாக தான் கொண்டு வந்தாக வேண்டும்.
டவுட் தனபாலு: தேசிய கல்வி கொள்கையை ஏத்துக்காம, மாநிலத்துக்கு மட்டும் தனியா ஒரு கொள்கையை கொண்டு வர்றீங்கல்ல... அதே மாதிரி, மதுவிலக்கு விஷயத்திலும் செயல்பட்டால் குறைஞ்சா போயிடுவீங்க என்பது தான் எங்க, 'டவுட்!'

