PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

தமிழக காங்., மூத்த தலைவர் இளங்கோவன்: உதயநிதிக்கு எந்த பொறுப்பை கொடுத்தாலும்அதில் சிறப்பாக செயல்படுவார்.உலகளவில் கார் பந்தயம்நடத்தி, சென்னைக்கு பெருமைசேர்த்தார். முதல்வர் ஸ்டாலின் உறுதியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உழைப்பும் அவரிடம் உள்ளது.
டவுட் தனபாலு: ஈரோடு இடைத்தேர்தலில், ஆளுங்கட்சி தரப்பு, 100 கோடி ரூபாய் செலவழித்து உங்களை ஜெயிக்க வச்சதா, அப்பவே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின... நீங்க, ஆளுங்கட்சியின் அனைத்து செயல்களுக்கும் இப்படி முட்டு கொடுப்பதை பார்த்தால், எதிர்க்கட்சிகளின் புகார்கள் உண்மை தானோ என்ற, 'டவுட்' தான் வருது!
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: துணை முதல்வராக உதயநிதியை நியமிக்க வேண்டும் என்பது, தி.மு.க., மூத்த தலைவர்கள் முதல் கடைசி தொண்டர்கள் வரை, நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒன்று. தொண்டர்கள்எதிர்பார்த்ததை முதல்வர் நிறைவேற்றி இருப்பது, அனைவருக்கும் மனநிறைவு அளிக்கிறது. தி.மு.க.,வில் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
டவுட் தனபாலு: கடந்த, 2019ல் அரசியலுக்கு வந்த உதயநிதி, அஞ்சே வருஷத்தில் துணை முதல்வராக உயர்ந்திருக்காரு... அண்ணாதுரை காலத்து அரசியல்வாதியான நீங்க ஒரு முறை கூட அமைச்சராகமுடியலையே... அந்த ஏக்கம், உங்க நெஞ்சில் துளி கூட இல்லன்னு, 'டவுட்'டே இல்லாம சொல்ல முடியுமா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு: நடிகர் கமல் தி.மு.க.,வுக்கு துதிபாடும் வேலையை செய்கிறார். ஒரு எம்.பி., பதவி வாங்குவதற்காக, தன் நிலை மறந்து செயல்படுகிறார். 'உன்னால் முடியும்தம்பி; உனக்குள் இருக்கும் உன்னை நம்பி...' என்று திரைப்படத்தில் பாடிய கமல், அவருக்குள் அவர் இல்லை, தி.மு.க.,வை நம்பி உள்ளார்.
டவுட் தனபாலு: நடிகர் கமல், யாரை நம்பி இருக்கிறாரோ, இல்லையோ... 2026 சட்டசபைதேர்தலில், உங்க கட்சி யாரை நம்பி இருக்குன்னு தெரியலையே...சீக்கிரமா கூட்டணிக்கு, கட்சிகளைவளைச்சு போடுங்க... இல்லாட்டி,2026 முடிஞ்சதும், 'இன்னும் 60 அமாவாசை தான்'னு 2031 தேர்தலுக்கு, 'டார்கெட்' வைக்க வேண்டியிருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

