PUBLISHED ON : அக் 06, 2024 12:00 AM

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்: நம்கட்சியின் முதல் மாநாடு என்பது,நம் அரசியல் கொள்கை பிரகடனமாநாடு. பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும்;பொறுப்பான குடிமகனை தான் நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாக திகழும் மனிதனைத் தான் மக்கள் போற்றுவர். நம் கட்சியினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும்என்பதே என் விருப்பம்.
டவுட் தனபாலு: நல்ல அறிவுரையாதான் இருக்கு... அதே நேரம், 'மற்ற கட்சிகள்ல இருக்கிற யாருக்கும் பொறுப்பில்லை... அவங்க பொறுப்பான குடிமகனாகவும் நடந்துக்கலை'ன்னு குத்தி காட்டுறாரோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருதே!
பத்திரிகை செய்தி: அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் மகனும், 'அதானி போர்ட்ஸ்' நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான கரண் அதானி, துணை முதல்வர் உதயநிதியை சென்னையில் சந்தித்து பேசியுள்ளார். அதேபோல், ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த முகேஷ் அம்பானியின் சகோதரரும், தொழிலதிபருமானஅனில் அம்பானியும், முதல்வர்ஸ்டாலினை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டவுட் தனபாலு: தி.மு.க.,வின் கூட்டணி பார்ட்னரான ராகுல், போகும் இடமெல்லாம் அம்பானி,அதானியை தான் பா.ஜ., அரசு ஊட்டி வளர்ப்பதா புகார் பத்திரம்வாசிக்கிறாரு... அவங்க தரப்பு, தி.மு.க., தலைவர்களை சந்திச்சுபேசியதை ராகுல் எப்படி எடுத்துக்குவார் என்ற, 'டவுட்' கிளம்புதே!
தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி: புலம்பெயர்ந்த மக்களின் மனதை புண்படுத்தக்கூடிய வகையில்,அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளமுகாமின் பெயர் இருக்கக்கூடாது என்பதற்காக, மறுவாழ்வு முகாம்கள் என பெயரை மாற்றியவர் முதல்வர்ஸ்டாலின். எப்போதுமே, புலம் பெயர்ந்த மக்களுக்கு உறுதுணையாக தி.மு.க., ஆட்சி செயல்படும்.
டவுட் தனபாலு: புலம் பெயர்ந்தவங்களுக்கு தி.மு.க., தலைமை மீது பாசம் அதிகம் என்பதில், 'டவுட்'டே இல்லை... இன்றைக்கு தி.மு.க., அரசில் முக்கியமான துறைகளுக்கு அமைச்சர்களாக இருக்கும் பலரும், அ.தி.மு.க.,வில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவங்க தான் என்பதேஇதற்கு ஆகச் சிறந்த உதாரணம்!