PUBLISHED ON : அக் 10, 2024 12:00 AM

அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: அ.தி.மு.க., என்பது, தொண்டனை நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி. தமிழகத்தில் நடிகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் உட்பட பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்; இப்பவும் ஆரம்பிக்கின்றனர். ஆனால், அ.தி.மு.க., மட்டுமே ஆட்சியை பிடித்தது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... இந்த வரிசையில் ராமராஜன், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக்னு இன்னும் நிறைய பேர் இருக்காங்களே... இப்பவும் கட்சி துவங்கியுள்ள சிலர், எம்.ஜி.ஆர்., மாதிரி ஆட்சியை பிடிச்சிடலாம்னு தான் நினைக்கிறாங்க... அவங்க எண்ணம் ஈடேறுமா அல்லது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கதையா போயிடுமா என்பது தான் இமாலய, 'டவுட்!'
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: அ.தி.மு.க.,வுக்கு விஜயை பார்த்து பயம் இல்லை. பாவம், சின்ன பையன். அவரும் வளர வேண்டாமா... அவர் வருவதை ஏன் தடுக்கிறீர்கள்? அவரால், அ.தி.மு.க.,விற்கு பாதிப்பே இல்லை; லாபம் தான்.தி.மு.க.,விற்கு உழைக்கிற சிலஇளைஞர்களும், த.வெ.க-.,வுக்குசென்று விடுவர். தி.மு.க.,வில் ஆர்.எஸ்.பாரதி போன்ற சீனியர் சிட்டிசன்கள் தான் இருப்பர்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,துவங்கி, 52 ஆண்டுகள் ஆகுது... உங்க பாணியில் சொல்லணும்னா, சின்ன பையன் விஜய் துவங்கிய புதிய கட்சியால் லாபம் அடைய நினைப்பது, எம்.ஜி.ஆர்., என்ற மாபெரும் ஆளுமை துவங்கிய, அ.தி.மு.க.,வுக்கு அழகா என்ற, 'டவுட்' தான் வருது!
மஹாராஷ்டிராவில் செயல்படும்,சிவசேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில்காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரைஅறிவிக்க வேண்டும். முதல்வர்வேட்பாளரை அறிவித்தால், அவர்களுக்கு இப்போதே ஆதரவளிப்பேன்.
டவுட் தனபாலு: காங்., - தேசியவாத காங்., மற்றும் உங்க கட்சி இணைந்த கூட்டணி ஆட்சியில், கடந்த முறை நீங்க தானே முதல்வராக இருந்தீங்க... இப்பவும், உங்க பெயரையே முன்மொழியாம, கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுக்குறீங்களே... தேர்தல்ல ஜெயிக்க முடியாதுங்கிற எண்ணத்துக்கு இப்பவே வந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

