PUBLISHED ON : அக் 11, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: ஹரியானாவில்,பா.ஜ.,வுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக கிடைத்த வெற்றி, பிரதமர் மோடி தலைமையிலான, வளர்ச்சி மற்றும் ஆட்சியின் மீதான மக்களின் நீடித்த நம்பிக்கையைகாட்டுகிறது. பிரிவினை அரசியல்பேசும் காங்கிரஸ், மக்களால் மீண்டும் நிராகரிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மீண்டும்மீண்டும் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்பவில்லை.
டவுட் தனபாலு: அவங்க அப்படியே இருப்பது தானே உங்களுக்கும் நல்லது... ஒருவேளை, தோல்விகளில் இருந்துகாங்., பாடம் படிச்சு, வெற்றிப் பாதைக்கு திரும்பி விட்டால், அது பா.ஜ.,வுக்கு தானே பாதகமா முடியும்... இதை நீங்க யோசிக்க மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
காங்., மூத்த தலைவர் பவன் கெரா: அரசு நிகழ்ச்சிகளில்,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசுவதை பிரதமர் மோடி வழக்கமாக வைத்துள்ளார். மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் நிகழ்ச்சியை,எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசுவதற்கு பயன்படுத்துவது நியாயமா?
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... ஆனா, வெளிநாடுகள்லபோய், இந்தியாவின் உள்விவகாரங்களையும், ஆளுங்கட்சி மீதான விமர்சனங்களையும்உங்க தலைவர் ராகுல் அடுக்குனாரே... அது நியாயம் என்றால், பிரதமர் செய்வதும் சரிதான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்: வரும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க, 16 அமாவாசை இருக்கிறது. 10 அமாவாசை முடிந்தவுடன், தி.மு.க., கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும், அ.தி.மு.க.,பொதுச்செயலர் பழனிசாமியுடன்சேர்ந்து கொள்வர். கூட்டணி வந்தால் ஏற்றுக்கொள்வது தான் ஜனநாயகக் கடமை. அனைவரும் சேர்ந்தால் தான் ஓசை எழுப்ப முடியும்.
டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் சில, 'கூட்டணி ஆட்சி' என, குரல் எழுப்பிட்டு இருக்காங்களே... அவங்க உங்க அணிக்கு வருவதற்கு, 'ஆட்சியில் பங்கு' என்ற நிபந்தனை விதித்தால், ஏத்துக்குவீங்களா அல்லது 'பங்கு தர்றவங்களுடன் போங்க'ன்னு சொல்லிடுவீங்களாஎன்ற, 'டவுட்' வருதே!