PUBLISHED ON : அக் 14, 2024 12:00 AM

உ.பி.,யில் செயல்படும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி: உத்தர பிரதேசம் உள்ளிட்ட எந்த ஒரு மாநிலத்திலும், பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். அதேபோல, தே.ஜ., மற்றும், 'இண்டியா' கூட்டணியிலும் இணைய மாட்டோம்; தனித்தே போட்டியிடுவோம்.
டவுட் தனபாலு: சமீப காலமா எந்த தேர்தல்களிலும் உங்க கட்சி ஜெயிக்கலை... காலி பெருங்காய டப்பாவாகி விட்ட பகுஜன் சமாஜ் கட்சியை, எந்த கட்சியும் கூட்டணியில் சேர்த்துக்கவும் தயாரில்லை... இதை புரிஞ்சுக்கிட்டுதான், 'சீச்சீ... இந்த பழம் புளிக்கும்' என்ற கதையாக, 'தனித்து போட்டி'ன்னு தம்பட்டம் அடிக்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக, பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர், ஹெச். ராஜா: ஹிந்து சமூகத்தை ஜாதியை சொல்லி பிரித்து, சிறுபான்மையினரை மதத்தின் பெயரால் இணைத்து, நாட்டை சிதைத்து விட வேண்டும் என, மனப்பால் குடித்த, காங்., கட்சிக்கு, ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் தேர்தலில் வாக்காளர்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.
டவுட் தனபாலு: ஆனாலும், அதை ஏத்துக்க மாட்டேங்கிறாங்களே... 'ஹரியானாவில், ஓட்டு எண்ணிக்கையில குளறுபடி'ன்னு கூப்பாடு போடுறாங்களே... இன்னும் எத்தனை தேர்தலில், அடி வாங்கினாலும், காங்., கட்சியின் நிலைப்பாடு மாறுமா என்பது, 'டவுட்' தான்!
புதுடில்லி, பா.ஜ., - எம்.பி., பன்சூரி ஸ்வராஜ்: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி யில், ராகுல் திறமையாக செயல்படவில்லை எனில், அந்த பதவியை கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு சுழற்சி முறையில் ஒதுக்க, 'இண்டியா' கூட்டணியினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டவுட் தனபாலு: என்னமோ, இப்ப மட்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ராகுல் திறமையாக செயல்படுற மாதிரி பேசுறீங்களே... 10 வருஷத்துக்கு பிறகு கிடைச்ச எதிர்க்கட்சி தலைவர் பதவியை, ராகுல் தக்க வைத்துக் கொள்வாரா என்பது, 'டவுட்' தான்!