PUBLISHED ON : அக் 15, 2024 12:00 AM

மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை இணை அமைச்சர் முருகன்: தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகள் சேதமடைந்த நிலையில், அடிக்கடி விபத்துகள் நடப்பதால், பயணியர் பாதிக்கப்படுகின்றனர். இந்த பேருந்துகளை மாற்றி, புதிய மின்வாகனங்களை வாங்கவும், அதற்கான முழு பங்களிப்பையும்மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக கூறியும், மாநில அரசு அதற்கு முன்வரவில்லை.
டவுட் தனபாலு: 'பணத்தை குடுத்துடுறோம்... பஸ்களை நீங்களே வாங்கிக்கலாம்'னு சொல்லி பாருங்க... 'இந்த டீலிங் நல்லாயிருக்கே'ன்னு உடனே, 'ஓகே' சொல்லிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகத்தில், மலைகளை வெட்டி கற்களாகவும், மணலாகவும்கடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி எடுத்து வருகின்றனர். ஆனால்,ஏற்கனவே அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் அப்போதுஎதுவும் பேசவில்லை. தற்போதுஅமைச்சர் பதவியில் இருந்து எடுத்தபின், 'கனிம வளத்தை காக்க போராட உள்ளேன்' என தெரிவித்து வருகிறார். இதுவும் ஒரு ஏமாற்று வேலை தான்.
டவுட் தனபாலு: பால்வளத் துறையை பாதுகாக்க தெரியாமதான், அமைச்சர் பதவியை பறிகொடுத்துட்டு நிற்கிறாரு... இப்ப, கனிம வளத்தை காக்க புறப்பட்டுட்டாரா... வீட்டுலசும்மாவே இருந்து போரடிச்சு போய் தான், போராட கிளம்புறாரோஎன்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு, வாகனங்கள் நிறுத்துவதற்காக, கூடுதலாக, 25 ஏக்கர் இடம் ஏற்பாடு செய்யுமாறு போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதால், அக்கட்சி நிர்வாகிகளுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும்,போலீஸ் அறிவுரையை ஏற்று, மாநாட்டுக்காக கூடுதல் இடம் தேடும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
டவுட் தனபாலு: மாநாடு தேதி நெருங்க, நெருங்க இந்த மாதிரி இன்னும் பல நிபந்தனைகளை விதிப்பாங்க பாருங்க... அது சரி... இந்த மாதிரி நிபந்தனைகளை உள்ளூர் போலீசார் தான் விதிக்கிறாங்களா அல்லது அவங்களுக்கு, 'எங்கிருந்தோ' கட்டளைகள் பறந்து வருதா என்பது தான், 'டவுட்!'

