PUBLISHED ON : அக் 21, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: இன்றைக்கு சுள்ளான்கள் எல்லாம் வந்து, 'அடுத்த, எம்.ஜி.ஆர்., நான் தான்' என்றும், 'அடுத்த முதல்வர் நான் தான்' எனவும் கூறுகின்றனர்; அதெல்லாம் எந்த காலமும் நடக்காது. அடுத்த முதல்வர் பழனிசாமி தான். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே தான் போட்டியே இருக்கும். அரசியலுக்கு புதிதாக வரக்கூடியவர்கள் எல்லாம், 30 நாட்களை தாண்ட மாட்டார்கள்.
டவுட் தனபாலு: நீங்க, நடிகர் விஜயை தான் சொல்றீங்க என்பது நல்லாவே தெரியுது... ஆனா, தி.மு.க.,வுக்கு எதிராக அரசியல் செய்ய திட்டமிடும் விஜயை, 'எதிரிக்கு எதிரி நண்பன்'னு பார்க்காம, நீங்களும் எதிரியாகவே பார்த்தால், பழனிசாமி மீண்டும் முதல்வராக முடியுமா என்பது, 'டவுட்' தான்!
பெரம்பலுார், தி.மு.க., - எம்.பி., அருண் நேரு: 'வரும், 2026 சட்டசபை தேர்தலில் துணை முதல்வர் உதயநிதி, முதல்வர் வேட்பாளராக இருப்பாரா?' என்று என்னிடம் கேட்கின்றனர். உதயநிதி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்பதை கட்சி தலைமையும், தமிழக மக்களும், கட்சியின், எம்.எல்.ஏ.,க் களும் சேர்ந்து முடிவு செய்வர்.
டவுட் தனபாலு: இப்பவே, உதயநிதி சூப்பர் முதல்வராகத் தானே வலம் வர்றாரு... 2026 தேர்தலில், உதயநிதியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, வெற்றி கிட்டலை என்றால், அவரது அரசியல் எதிர்காலம் என்னாவது... அதனால, அந்த ரிஸ்கை எல்லாம், தி.மு.க., தலைமை எடுக்கவே எடுக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்: தமிழகத்தில், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மாநில அரசு திறமையாக கையாண்டுள்ளது; அதை கவர்னரும் பாராட்டி இருக்கிறார். 'இந்த மழையால் ஏதேனும் பெரிய பாதிப்பு ஏற்படும்; அதில் அரசியல் செய்யலாம்' என்று நினைத்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவுக்கு, எல்லாமே நல்லபடியாக நடந்ததும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்திஉள்ளது. இதனால், அவர் வேறு மாதிரி பேசியிருக்கிறார்.
டவுட் தனபாலு: தமிழகத்தில் பெரிய அளவில் மழை இன்னும் பெய்யவே இல்லை... அது தான், எதார்த்தமான உண்மை... அடுத்து ரெண்டு, மூணு நாள் சேர்ந்த மாதிரி மழை பெய்தால், ஆளுங்கட்சியின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!