PUBLISHED ON : அக் 25, 2024 12:00 AM

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்: வயநாடு தொகுதிக்கு பிரியங்காவைவிட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. பார்லிமென்டில் வயநாடு மக்களின் குரலாக ஒலித்து, தொகுதி மக்களின் தேவைகளை பிரியங்கா பூர்த்தி செய்வார்; அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
டவுட் தனபாலு: கேரளாவுல பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ்ல, வயநாடுக்கு தகுதியான ஒருத்தர் கூட வேட்பாளரா கிடைக்கலையா... உ.பி.,யின் ரேபரேலியை உங்க குடும்பம் குத்தகைக்கு எடுத்துக்கிட்ட மாதிரி, கேரளாவின் வயநாடையும் பட்டா போட்டுக்கிட்டது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: 'தமிழகத்தில், பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர்' என, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். கோவில் உண்டி யல் பணத்தை எடுத்துதான், இலவச திருமணம் நடத்தி வைத்துள்ளனர். ஆனால், விளம்பரம் மட்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு. இது என்ன வேஷம்?
டவுட் தனபாலு: உங்களது குற்றச்சாட்டை பார்த்தால், 'தி.மு.க., அறக்கட்டளை பணத்தில் இலவச திருமணங்களை நடத்தணும்... அவற்றையும் அறநிலையத்துறை கோவில்கள்ல நடத்தினால் தான் ஏத்துக்குவோம்'னு சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: ஓசூரில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டால், பெங்களூரின் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில், ஓசூருக்கு அருகில் உள்ள சோமனஹள்ளியில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க, கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை, தி.மு.க., அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: கர்நாடகாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி... தி.மு.க., கூட்டணியில் காங்., இருப்பதால், சோனியா, ராகுலிடம் பேசி, கர்நாடகாவின் முடிவுக்கு முதல்வர் தடை போட்டுடுவார்னு நினைச்சு நீங்க கோரிக்கை விடுப்பது நல்லாவே தெரியுது... ஆனா, அதெல்லாம் நடக்குமா என்பது, 'டவுட்' தான்!

