PUBLISHED ON : அக் 28, 2024 12:00 AM

தமிழக, பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர், ஹெச்.ராஜா: பஞ்சாப் போல தமிழகமும், நாட்டின் எல்லையை ஒட்டிய மாநிலம். இங்கும் பிரிவினைவாத சக்திகள் நிறைய உள்ளன. இதையெல்லாம் கண்டறிந்து, முறையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றால், தமிழகத்துக்கான கவர்னராக ரவியே இருக்க வேண்டும்; இல்லை, அவர் போன்றவர் தான் இருக்க வேண்டும்.
டவுட் தனபாலு: ஏற்கனவே, கவர்னர் ரவியை, 'பா.ஜ.,வின் ஊதுகுழல், பிரசார பீரங்கி' என்றெல்லாம், தி.மு.க., தலைவர்கள் வசைபாடுறாங்க... உங்களது கோரிக்கையை பார்த்தால், 'அதெல்லாம் உண்மை தான்' என்பதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பா.ஜ.,வை சேர்ந்த, கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை: அகில இந்திய, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநிலத்தின் மூத்த அரசியல்வாதி. அவரை, வயநாடில் பிரியங்காவின் வேட்பு மனு தாக்கலின்போது உள்ளே அனுமதிக்காமல், அவரது சொந்த கட்சியினரே அவமதித்து விட்டனர். இதுபோன்ற அவமதிப்பு, அவருக்கு பல முறை நடந்துள்ளது.
டவுட் தனபாலு: காங்., தலைவர்களை பொறுத்தவரை, சோனியா குடும்பத்தால் அவமதிப்பு கிடைச்சாலும், அதை எல்லாம் வெகுமதியாகவே எடுத்துக்குவாங்க... அதனால, நீங்க என்ன தான் துாண்டில் போட்டாலும், அதுல அவங்க ஒரு போதும் சிக்கவே மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: கடந்த லோக்சபா தேர்தலை விட, அ.தி.மு.க., 1 சதவீதம் கூடுதல் ஓட்டுகளை பெற்றுள்ளது. 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டு, 19.35 சதவீதம்; 2024 லோக்சபா தேர்தலில், 20.35 சதவீதமாக உயர்ந்து உள்ளது. அதேபோல, தி.மு.க., ஓட்டு, 2019 தேர்தலில் 33.9 சதவீதம். 2024 தேர்தலில் 26.50. கிட்டத்தட்ட 7 சதவீத ஓட்டுகள், தி.மு.க., குறைவாக பெற்றுள்ளது. இதை வைத்து, யாருக்கு செல்வாக்கு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: இன்னும் கொஞ்சம் பின்னாடி போகலாமா... 2014 லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்டு, அ.தி.மு.க., வாங்கிய ஓட்டுகள், 45 சதவீதம்... அதுல பாதிக்கும் கீழே கோட்டை விட்டுட்டு, '1 சதவீதம் ஓட்டு வங்கி கூடியிருக்கு' என்பது, உங்க தலைமைக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!

