PUBLISHED ON : நவ 01, 2024 12:00 AM

தமிழக வெற்றி கழக தலைவர்விஜய்: நம் அரசியல் துவங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள், இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பர். அத்தகைய விமர்சனங்களில், ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும் கூட மனதில் ஏற்றி விடாமல் கடந்து செல்வோம். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலை கையில் எடுப்போம்; வரும் 2026ல் நம் இலக்கை அடைவோம்.
டவுட் தனபாலு: அது சரி... 2026ல் கோட்டையில் கொடி ஏற்றிடலாம்னு உறுதியா நம்புறீங்கபோல தெரியுதே... ஆனா, அந்த கோட்டையை பிடிக்க வட்டம், குட்டம், நகரம், ஒன்றியம், மாவட்டம்னு அடுக்கடுக்கான அமைப்பு ரீதியான பலம் வேணுமே... அதை எல்லாம், 2026 சட்டசபை தேர்தலுக்குள்ள உருவாக்கிடுவீங்களா என்ற, 'டவுட்' வருதே!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: 'ஆட்சியில் அதிகார பகிர்வு' என விஜய் கூறியது, தி.மு.க., கூட்டணியில்சலசலப்பை ஏற்படுத்தவே! தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய, 25 சதவீதம் ஓட்டு வங்கி உள்ள அ.தி.மு.க., குரல் கொடுக்க வேண்டும். இதனோடுசில கட்சிகள் இணைந்தால், அதிகாரத்தை கைப்பற்ற முடியும்.ஆட்சியிலும், அதிகாரத்திலும்பங்கு என்பதில், வி.சி., எப்போதும் உறுதியாக உள்ளது.
டவுட் தனபாலு: 'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைக்கு அ.தி.மு.க., குரல்கொடுக்கணும்'னு கேட்குறீங்களே...தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் அரசியல் ரீதியாக என்ன தான் எதிரும், புதிருமாக இருந்தாலும்,'தனித்து ஆட்சி' என்பதில் மட்டும், ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்கவே மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு: அரசியல்ரீதியாக பார்த்தால், அ.தி.மு.க., எந்த கொள்கை திட்டத்தின்படி செயல்படுகிறதோ, அதையே நடிகர் விஜயும் சொல்லி இருக்கிறார். அதேபோல, அ.தி.மு.க.,வை விமர்சிக்கவோ, குறைகளை சொல்லவோ அவரால் முடியவில்லை. குறைகள்சொல்ல எதுவும் இல்லை என்பதாலேயே சொல்லவில்லை.
டவுட் தனபாலு: என்னங்க இது... உங்க நிர்வாகத்தால, மக்கள் பாதிக்கப்பட்டால் தானே குறை சொல்ல முடியும்... பல தேர்தல்கள்ல அடி மேல அடி வாங்கி, நொந்து, நுாலாகி கிடக்கிற உங்களை ஏன் சீண்டணும்னு தான், கண்டுக்காம விஜய் கடந்து போயிட்டாரு என்பதில், 'டவுட்'டே இல்லை!