PUBLISHED ON : நவ 04, 2024 12:00 AM

அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்: தற்போதுதான், விஜய் அரசியலுக்கு தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்காக ஒரு மாநாட்டையும் நடத்தி முடித்து உள்ளார். அதனால், இந்த விஷயத்தில் மேற்கொண்டும் என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். எது கேட்டாலும், என்னுடைய பதில், 'நோ கமென்ட்ஸ்' தான்.
டவுட் தனபாலு: எப்பவும் ஏடாகூடமா பேசுற நீங்களே அடக்கி வாசிக்குறீங்களே... விஜய் கட்சியுடன் எதிர்காலத்தில் சேர்ந்து பயணிக்க வேண்டிய நிலை வந்தாலும் வரலாம் என்ற முன்ஜாக்கிரதையோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்டமைப்பை வலுப்படுத்த, வரும் 5ம் தேதி முதல் கிராம கமிட்டி சீரமைப்பு பணிகள் துவங்கி, டிச., 15க்குள் முடியும். அதைத் தொடர்ந்து, 'கிராம தரிசனம்' என்ற பெயரில், கிராமங்கள் நோக்கிச் செல்கிறோம். எங்கள் தலைவர்கள் கிராம மக்களுடன் தங்கிப் பணியாற்றுவர். கட்சி வலிமையாக இருந்து, கிராமங்களில் உயிரோட்டமாக இருந்தால்தான், பிற கட்சிகள் எங்களை தேடி வரும்.
டவுட் தனபாலு: அது சரி... 2026 சட்டசபை தேர்தலுக்குள்ள கட்சியை வலிமையாக்கினால் தான், தி.மு.க.,விடம் கூடுதல் சீட்கள் கேட்டு பேரம் பேச முடியும்... கூடுதல் சீட்கள்ல ஜெயிச்சாதான், ஆட்சியில பங்கு கேட்க முடியும்... விஜய் கட்சியின் வரவு, உங்களை எல்லாம் உசுப்பி விட்டிருக்கு என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா: நடிப்பு என்றால் நடிகர் சிவாஜி தான். அவருக்கு சமமாக நடிப்பதற்கு இன்று வரை யாரும் இல்லை. ஆனால், அவரால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. விஜயகாந்த் உட்பட எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். சினிமா பிரபலம் என்பதற்காக, அவர்களால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதை தமிழக மக்கள் பலமுறை, அவர்கள் அளித்த தீர்ப்பின் வாயிலாக சொல்லி உள்ளனர்.
-டவுட் தனபாலு: நீங்க சொல்றதும் சரிதான்... ஆனாலும், ஏற்கனவே கட்சி துவங்கிய அந்த நடிகர்கள் யாரும், 'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு' என அறிவிக்கலையே... இப்ப, 'ஆட்சியில் பங்கு' என விஜய் அறிவித்திருப்பதால், மக்கள் தீர்ப்பில் மாற்றம் வராதுன்னு, 'டவுட்' இல்லாம உங்களால சொல்ல முடியுமா?