PUBLISHED ON : நவ 15, 2024 12:00 AM

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் காலியிடங்களை, உடனுக்குடன் நிரப்புவது அவசியம். ஆனால், கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதற்காக, நீதிமன்ற வழக்குகளை காண்பித்து, பணியிடங்களை நிரப்ப இயலவில்லை என,சாக்குபோக்கு கூறும் ஆட்சியாக தி.மு.க., ஆட்சி உள்ளது.
டவுட் தனபாலு: தமிழக நிதிஅமைச்சர் பதவியை வகித்தவர்நீங்க... மாநில அரசுக்கு இருக்கிற நிதி நெருக்கடி பற்றிஉங்களுக்கு நல்லாவே தெரியும்...அதனால, நீங்க கூட்டணி வச்சிருக்கிற மத்திய பா.ஜ., அரசிடம் பேசி, மாநிலத்துக்கு கூடுதல் நிதியை வாங்கித் தந்துட்டு, குற்றம்சாட்டினா, 'டவுட்'டேஇல்லாம உங்களை பாராட்டலாம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான்: கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது. அதனால்தான், தொடர்ந்து தனித்தே போட்டியிடுகிறேன். இனியும், நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். மற்றவர்களுக்காக கொள்கையைவிட்டுக் கொடுத்து, யாரிடமும்கூட்டணி சேர வேண்டிய அவசியம் இல்லை. மக்களோடு மட்டும்தான் எங்கள் கூட்டணி. மக்களை மட்டும்தான் நாங்கள் நம்புகிறோம்.
டவுட் தனபாலு: 'மக்களோடும்,தெய்வத்தோடும் மட்டும்தான் கூட்டணி' என, விஜயகாந்தும் சொன்னாரு... ஆனா, கடைசியிலகூட்டணி வச்ச பிறகுதான், எதிர்க்கட்சி தலைவர் பதவி வரைக்கும் உயர்ந்தார்... நீங்களும்தனித்துப் போட்டி என்ற பாதையில்பயணித்தால், சட்டசபை வாசலையாவது தொட முடியுமா என்பது, 'டவுட்'தான்!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'எதிர்க்கட்சி தலைவர்பழனிசாமி என்னை பற்றி விமர்சனம் செய்கிறார்' என, தொண்டர்களுக்கு கடிதம் எழுதிஇருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.அதில், என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துஇருக்கிறார். ஒரு எதிர்க்கட்சி தலைவரைப் பார்த்து, 'ஊர்ந்து சென்றார்; தவழ்ந்து சென்றார்; கரப்பான் பூச்சி போல பறந்து சென்றார்' என்றெல்லாம் பேசுகிறார். தன்னை மறந்து, தன் பதவியை மறந்து பேசுகிறார் ஸ்டாலின்.
டவுட் தனபாலு: அரசியல்ல, விமர்சனங்கள் நாகரிகமா இருக்கணும் என்பது உண்மைதான்... ஆனா, 'என்னைப் பார்த்துஊர்ந்து சென்றார், தவழ்ந்து சென்றார்னு ஸ்டாலின் சொல்வதைநிரூபிக்க முடியுமா?' என, நீங்க பதில் சவால் விடாமல் இருப்பதுஏன் என்ற, 'டவுட்' வருதே!