PUBLISHED ON : டிச 27, 2024 12:00 AM

தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி: 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்' என, தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், இடைத்தேர்தலில் எங்களது கட்சியினரும் போட்டியிட விருப்பமாக உள்ளனர். இந்த கருத்தை கட்சி தலைமையிடம் சொல்வோம்; தலைமை என்ன சொல்கிறதோ, அதை ஏற்று செயல்படுவோம்.
டவுட் தனபாலு: அதுசரி... போன இடைத்தேர்தலில், இளங்கோவன் வெற்றிக்காக 100 கோடி ரூபாயை தி.மு.க., செலவழிச்சதா சொல்றாங்க... இந்த முறை அதைவிட அதிகம் செலவாகும்போல தெரியுது... கூட்டணி கட்சிக்கு அவ்வளவு கோடிகளை அள்ளி விடுறதுக்கு பதிலா, நாமே நின்னுடலாம்னு நினைக்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll
பத்திரிகை செய்தி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், அவரது நுாற்றாண்டைக் கொண்டாட பா.ஜ., மேலிடம் ஆர்வம் காட்டாதது, அக்கட்சி தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
டவுட் தனபாலு: தமிழகத்தில், 24 நாட்கள் முதல்வராக இருந்த ஜானகி அம்மாவுக்கே, அ.தி.மு.க.,வினர் நுாற்றாண்டு விழா கொண்டாடுனாங்க... இன்றைக்கு, மத்தியில் மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சியில் அமர்ந்துள்ளதற்கு விதைபோட்ட வாஜ்பாய்க்கு நுாற்றாண்டு விழா கொண்டாடாம தடுத்தது யார் என்ற, 'டவுட்' கிளம்புதே!
lll
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: 'வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 25 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம்' என, துணை பொதுச்செயலர் வன்னியரசு கூறியிருப்பது அவருடைய சொந்த, தனிப்பட்ட கருத்து. எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது குறித்து, நாங்கள்முன்கூட்டியே நிபந்தனை ஏதும் விதிக்க மாட்டோம். எங்களுடைய தகுதி, திறமை, மக்கள் செல்வாக்கு குறித்தெல்லாம் கூட்டணியில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.
டவுட் தனபாலு: 'வன்னியரசு கூறியது அவரது தனிப்பட்ட கருத்துதான்... ஆனாலும், 25 இடங்களில் போட்டியிட நாங்க தகுதியானவங்க தான்' என்பதை, தி.மு.க., தலைமைக்கு நாசுக்கா உணர்த்துறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll

