PUBLISHED ON : ஜன 02, 2025 12:00 AM

அ.தி.மு.க., சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன், போலீஸ் கமிஷனர் அருண் ஆகிய மூவரும் மாற்றி மாற்றி பேசி வருகின்றனர். அதிலும் அமைச்சர் ரகுபதி, எப்போதும் தன்னை மறந்து பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு, 'மைக் மேனியா' வந்து விட்டது. மைக்கை எங்கு கண்டாலும், கருத்து மழை பொழியத் துவங்கி விடுகிறார். சட்ட அமைச்சராக இருக்கிறார். ஆனால், அவர் பேசும் எந்தக் கருத்தும் சட்டத்துக்கு உட்பட்டதாகஇல்லை.
டவுட் தனபாலு: மைசூர் போண்டாவுக்கும், மைசூருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதா என்ன...? அந்த மாதிரி, உங்க கட்சியின் செல்லுார் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு, 'டப் பைட்' கொடுக்க ரகுபதி முடிவு பண்ணிட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
தெலுங்கானாவில் செயல்படும்பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்.எல்.சி., கவிதா: முன்னாள்பிரதமர் நரசிம்மராவை,அப்போதைய காங்கிரஸ் அரசு புறக்கணித்தது என்பது அனைவரும் அறிந்ததே. அவரை அக்கட்சியினர் அவமரியாதை செய்தனர். முன்னாள் பிரதமர் என்ற முறையில், டில்லியில் நரசிம்ம ராவுக்கு நினைவிடம்அமைத்திருக்க வேண்டும். ஆனால்,அதை காங்., செய்யவில்லை.
டவுட் தனபாலு: நரசிம்ம ராவ், சுயமாக சிந்தித்து ஆட்சி நடத்தினார்... சோனியா குடும்பத்தின் சொல்படி செயல்படவில்லை... ஆனா, மன்மோகன்சிங் அப்படி இல்லையே...அதனால்தான், மன்மோகனுக்கு தந்த முக்கியத்துவத்தை நரசிம்மராவுக்கு சோனியா குடும்பம் தரலைஎன்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக சட்டத்துறை அமைச்சர்ரகுபதி: இந்த ஆட்சியில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. பெண்கள் தைரியமாக வெளியே வருகின்றனர். அண்ணா பல்கலை பாலியல் சம்பவத்தில், யார் அந்த சார் எனபலரும் கேட்கின்றனர். அது, அந்த சாருக்கு தான் தெரியும்.விசாரணை நடக்கிறது; உண்மையில் அப்படியொரு சார் இருந்தால், அது விரைவில் தெரிய வரும்.
டவுட் தனபாலு: அது சரி... பெண்கள் தைரியமாக வெளியில வர்றதையே, ஆட்சிக்கான சாதனையா சொல்றீங்களே... அப்படி துணிச்சலா வெளியே வந்த அண்ணா பல்கலை மாணவிக்கு பாதுகாப்பு தராம, இப்படி வெட்டி நியாயம் பேசுவதுசரியா என்ற, 'டவுட்'தான் வருது!