PUBLISHED ON : ஜன 04, 2024 12:00 AM

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 1.67 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். தொடர் சேவையின் வாயிலாக, 4 கோடி பேர் பயனடைந்துள்ள நிலையில், தொழிலாளரை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அந்த வகையில், தொழிற்சாலைகளுக்கே சென்று, மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையிலான திட்டமாக, இது அமைய உள்ளது.
டவுட் தனபாலு: இந்த மாதிரி புது புது திட்டங்களை அறிவிக்கிறது நல்லது தான்... அதே நேரம், அரசு மருத்துவமனைகளை தேடி வர்ற நோயாளிகளுக்கு நல்லபடியா சிகிச்சை அளித்து, அவங்களை குணப்படுத்தி அனுப்புறதுலயும் அக்கறை காட்டுனா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
பத்திரிகை செய்தி: சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்தது தொடர்பான பண மோசடி வழக்கில், விசாரணைக்காக, புதுடில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும், காங்., - எம்.பி.,யுமான கார்த்தி ஆஜரானார். ஏற்கனவே இவர் மீது, ஐ.என்.எக்ஸ்., மீடியா மற்றும் ஏர்செல் - -மேக்சிஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
டவுட் தனபாலு: தமிழக காங்., தலைவர் பதவியை அலங்கரிக்க வேண்டும் என, கார்த்தி துடியா துடிக்கிறார்... இத்தனை வழக்குல சிக்கியவருக்கு பதவியை குடுத்தா, நாளைக்கு திஹார் ஜெயில்ல இருந்து தான், கட்சி பணியை கவனிப்பாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
காங்., முன்னாள் தலைவர் சோனியா: இந்திய ஜனநாயகத்தின் அடித்தள துாணாக, மதச்சார்பின்மை உள்ளது. ஆனால், தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துகின்றனர்; இதனால், சமூகத்தில் பிளவு ஏற்படுகிறது.
டவுட் தனபாலு: எந்த மதத்துக்கும் சார்பாகவோ, எதிராகவோ செயல்படாமல் இருப்பது தான் உண்மையான மதச்சார்பின்மை... ஆனா, உங்க கூட்டணியில இருக்கிற தி.மு.க., தலைவர்களின் செயல்பாடுகளை பார்த்தாலே, மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துவது யார் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுமே!