PUBLISHED ON : ஜன 06, 2024 12:00 AM

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்: ஓய்வூதியர்கள் அகவிலைப்படி, கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இருந்து வழங்கப்படவில்லை. அப்போதெல்லாம் கேட்காத தொழிற்சங்கத்தினர், இப்போது கேட்பதற்கு உள்நோக்கம் உள்ளது. பொங்கல் பண்டிகை யின் போது, தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டாலும், பயணியருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு பஸ்கள் இயக்கப்படும்.
டவுட் தனபாலு: எதிர்க்கட்சியா இருந்தப்பவும், தேர்தல் வாக்குறுதியிலும், 'ஓய்வூதியர்களின் கோரிக் கையை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம்'னு ஆசையை துாண்டி ஓட்டு வாங்கியது யார்...? இப்ப, உள்நோக்கம், வெளிநோக்கம்னு சாக்குபோக்கு சொல்றது, பொறுப்பான அமைச்சருக்கு அழகா என்ற, 'டவுட்' வருதே!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: 'எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவிற்கு 'பேஸ் வேல்யூ' இருந்தது. ஆனால், நமக்கு பேஸ் வேல்யூ இல்லை. அதனால், ஊழலற்ற ஆட்சி நடத்த வேண்டும்' என, பதவி ஏற்றவுடன், பழனிசாமியிடம் நான் தெரிவித்தேன். அவர் அதை ஏற்கவில்லை.
டவுட் தனபாலு: அவர் ஏற்காவிட்டால் என்ன... கொள்கையில் உறுதியா நின்னு, குறைந்தபட்சம் இவர் வகித்த வீட்டு வசதி துறையிலாவது லஞ்ச, லாவண்யத்தை ஒழித்துக் காட்டியிருந்தா, 'டவுட்'டே இல்லாம இவரை பாராட்டி இருக்கலாம்... ஆனா, அப்படி எதுவும் நடந்த மாதிரி தெரியலையே!
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்., மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி: லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு இரண்டு சீட்டுகள் தர மம்தா தயாராக இருப்பதாக கூறுகின்றனர். ஏற்கனவே, மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு இரண்டு எம்.பி.,க்கள் உள்ளனர். இதில் புதிதாக அவர் என்ன தருகிறார். அவரது நிஜ முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: இப்ப தானே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு... இன்னும் போக போக பல மாநிலங்களிலும், 'இண்டியா' கூட்டணி கட்சி தலைவர்களின் நிஜ முகம் ஒவ்வொன்றாக வெளிப்படும் என்பதில், 'டவுட்'டே இல்லை!