
மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி: பொங்கல் பண்டிகைக்காக, 'டாஸ்மாக்' மது விற்பனைக்கு, இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. விற்பனையாகும் தொகை குறைய வேண்டும் என்று தான் நினைக்கிறோம்; கூட வேண்டும் என நினைக்கவில்லை. முறையாக வியாபாரம் நடக்கிறதா என்பதை அறியவே அதிகாரிகள் கணக்கு பார்க்கின்றனர்; ஏன் வியாபாரம் ஆகவில்லை என பார்ப்பதற்காக இல்லை.
டவுட் தனபாலு: உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள்... ஆனா, தமிழர் பண்டிகையான பொங்கலை எல்லாரும் மகிழ்ச்சியா கொண்டாடணும்னு நீங்க நினைச்சா, பொங்கல் விடுமுறையான மூணு நாளைக்கும் 'டாஸ்மாக்' கடைகளை இழுத்து மூடுங்க பார்ப்போம்... இதை மட்டும் நீங்க செய்தால், 'டவுட்'டே இல்லாம உங்களை பாராட்டலாம்!
பத்திரிகை செய்தி: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் உள்ள, சிவன் சுந்தரமூர்த்தி நாயனார் வழக்காடு மன்றத்தில், தி.மு.க.,வினர், முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலைக்காக வேண்டி பிராது மனு அளித்தனர்.
டவுட் தனபாலு: அடடா... பகுத்தறிவு பகலவன்கள் இந்த அளவுக்கு இறங்கிட்டாங்களா... அது சரி... ஆறு மாசமா ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இருக்கிற செந்தில் பாலாஜியை பார்த்த பிறகும், இறங்கி வரலைன்னா எப்படி... அடுத்து மண் சோறு சாப்பிடுவாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்: நான்கு ஆண்டுகளாக முதல்வராக இருந்த ருசி, பழனிசாமியை விடவில்லை. திரும்பவும் இந்த நாட்டை சூறையாடி, கொள்ளையடித்து செல்ல வேண்டும் என்று தான், அ.தி.மு.க.,வை அடாவடியாக அபகரித்திருக்கிறார். இது தான் நிதர்சனம்.
டவுட் தனபாலு: முதல்வர் பதவியின், 'ருசி' எப்படி இருக்கும் என்பது, அந்த பதவியில மூணு முறை அமர்ந்த உங்களுக்கு தானே நன்கு தெரியும்... ஆனா, மூணு முறையும் பந்தி முடியும் முன்பே பாதியில எழுப்பி விட்ட ஏக்கம் உங்க பேச்சில் தெரியுது என்பதில், 'டவுட்'டே இல்லை!

