
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: 'காங்கிரஸ் கட்சியின் முக்கிய எதிரி யார், கம்யூனிஸ்டா, பா.ஜ.,வா?' என, கேரள மாநில கம்யூனிஸ்ட் தலைவர் பினோய் சிவன் கேள்வி எழுப்பியுள்ளார்; அது நியாயமான கேள்வி. 'ராகுல் ஏன் கேரளாவின் வயநாட்டில் போட்டியிட வேண்டும்? வட மாநிலங்களில் போட்டியிட்டு அங்கிருந்து பார்லிமென்டுக்கு போக வேண்டும். அதை சோதித்து பாருங்கள்' என, காங்கிரசுக்கு சவால் விட்டிருக்கிறார் பினோய் சிவன். நியாயமான கேள்வி தானே.
டவுட் தனபாலு: அவர் கேட்டதில் எந்த தப்பும் இல்லை... அதே மாதிரி, உங்க கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரையும், 'கேரளாவில் வந்து நின்னு பாருங்க' என்று அதே பினோய் சிவன் அழைத்தால், அந்த சவாலை உங்க கட்சியினர் ஏத்துக்குவாங்களா என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பிதழ் வழங்கிய ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளிடம், 'அயோத்தி ராமரை தரிசிக்க ஆவலாக இருக்கிறேன். வசதிப்படும் நாளில் கட்டாயம் அயோத்திக்கு வந்து, ராமரை தரிசிப்பேன்' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா தெரிவித்துள்ளார்.
டவுட் தனபாலு: அயோத்தி ராமர் கோவிலை தரிசிக்க, முதல்வரின் மனைவி ஆர்வமாக இருப்பதில், ஆச்சரியம் ஏதுமில்லை... அதே நேரம், பிற மதங்களின் விழாக்களில் பங்கேற்கும் தன் கணவரையும் கையோட அயோத்திக்கு அழைச்சுட்டு போனா, 'டவுட்'டே இல்லாம அவங்களை பாராட்டலாம்!
காங்., - எம்.பி., சசி தரூர்: லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அக்கட்சியை அதன் கூட்டணி கட்சிகள் ஆதரிக்கும் என, சொல்ல முடியாது. அக்கட்சிகள் எங்களுக்கு கூட ஆதரவு தெரிவிக்கலாம்.
டவுட் தனபாலு: தேர்தல்ல, பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துட்டா, பிற கட்சிகளுக்கு ஆட்சி அமைப்பதில் எந்த பங்கும் இருக்காதே... அப்புறம், பா.ஜ.,வின் கூட்டணி கட்சிகள், உங்களை ஆதரித்தால் என்ன, ஆதரிக்காமல் போனால் தான் என்ன என்ற, 'டவுட்'தான் வருது!

