PUBLISHED ON : ஜன 20, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: எங்கு பார்த்தாலும், முதல்வர் தன் அப்பா பெயரை வைக்கிறார். மதுரையில் திறக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கருணாநிதி பெயர் வைக்காமல், ராஜராஜ சோழன், கரிகாலன், பல்லவ மன்னர் பெயர்களை சூட்டலாம். முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைப்பதை ஏற்க முடியாது.
டவுட் தனபாலு: நீங்க ஆட்சியில இருந்தப்ப, எல்லாவற்றுக்கும் ஜெ., பெயரை சூட்டுனீங்க... இப்ப, அவங்க முறை என்பதால், அடிச்சு ஆடுறாங்க... நல்லவேளையாக, ரயில் நிலையங்கள் எல்லாம் மத்திய அரசு கட்டுப்பாட்டுல இருக்குது... இல்லை என்றால், அவற்றுக்கும் அப்பா பெயரையே முதல்வர் சூட்டிடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
காங்., - எம்.பி., சசி தரூர்: நாடு முழுதும், பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாகி, ஆயிரக்கணக்கான பயணியர் தினமும் அவதிப்படுகின்றனர். இதற்கான முன் ஏற்பாடுகளில், விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அக்கறை காட்டவில்லை.
டவுட் தனபாலு: பனிமூட்டம் என்பது இயற்கை... அதை மீறி, ஒரு அமைச்சர் என்ன செய்துட முடியும்... பனிமூட்டத்துக்கு மத்தியில, சரியான நேரத்துக்கு விமானங்களை இயக்கி, எங்கேயாவது போய் முட்டிக்கிட்டா என்ன பண்றது...? அப்பவும், 'அமைச்சர் முன்னெச்சரிக்கையா செயல்படலை' என்று இதே சசி தரூர் குற்றம் சாட்டுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தமிழக அரசு விரைவு போக்குவரத்து பஸ்களில், 5 முதல், 30 ரூபாய் வரை, எந்த அறிவிப்புமின்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பயணியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டவுட் தனபாலு: பொங்க லுக்கு, 1,000 ரூபாயை சிரமப்பட்டு குடுத்துட்டு, இப்படி சத்தமில்லாம திரும்ப எடுக்கிறாங்களோ...? முதல்வர் அடிக்கடி சொல்ற மாதிரி, 'நாங்கள் சொன்னதை செய்வோம்; சொல்லாததையும் செய்வோம்' என்பதில், இந்த அதிரடி கட்டண உயர்வும் அடக்கமோ என்ற, 'டவுட்'தான் வருது!