PUBLISHED ON : பிப் 02, 2024 12:00 AM

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: அரசியல் என்பதும் திருவிளையாடல் தான். அரசியலில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவர்; ஆயினும், பழையவைகளை பேசுவது சரியல்ல.
டவுட் தனபாலு: உங்களை எதிர்த்து நிற்பவர்கள், அடுத்த தேர்தலில் உங்களுடன் வருவர் என்றால், இப்ப உங்களுடன் இருப்பவர்களை, 'எதிர் முகாமுக்கு போயிட்டு, அடுத்த தேர்தல் சமயத்தில் வாங்க' என்று சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலை: அரசு வேலையே செய்யாமல், புழல் சிறையில் கம்பி எண்ணும் செந்தில் பாலாஜிக்கு, மக்களின் வரிப்பணத்தில் மாதம், 1.05 லட்சம் ரூபாய் என, எட்டு மாதமாக, 8.40 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கும் ஆட்சியாக, தி.மு.க., ஆட்சி உள்ளது.
----டவுட் தனபாலு: அவரது சம்பளம் மட்டுமா... அவரது உதவியாளர்கள், ஓட்டுனர்கள், அரசு பங்களா பராமரிப்பாளர்கள், பங்களாவுக்கான மின் கட்டணம் என்று மாசத்துக்கு 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை மக்கள் வரிப்பணத்தை வெட்டியா செலவழிக்கிறாங்க... இதற்கான பலன்களை வரும் லோக்சபா தேர்தலில் அறுவடை செய்வாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைமை நிலைய செயலர் நிஜாம் முகைதீன்: கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில், நவாஸ் கனி வெற்றி பெற்றார்; மீண்டும் அதே தொகுதியை, நாங்கள் கேட்கிறோம். கூடுதலாக ஒரு தொகுதி தந்தால் மகிழ்ச்சி அடைவோம். தரவில்லை என்றாலும் வருத்தப்பட மாட்டோம்.
டவுட் தனபாலு: தி.மு.க.,வுக்கு எதிரான அ.தி.மு.க., அணியில, ஆளே இல்லாம ஈ ஓட்டிட்டு இருக்காங்க... அந்த பக்கம் எட்டி பார்த்தீங்கன்னா, ஒன்று, ரெண்டு இல்ல, மூணு, நாலு தொகுதிகள் கூட சேர்த்து தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

