PUBLISHED ON : பிப் 07, 2024 12:00 AM

பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி: பதிவுத்துறைக்கு அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை அடைய, சார் -- பதிவாளர் அலுவலகம் வாரியாக, சீராய்வு மேற்கொள்ள வேண்டும். கடந்த நிதியாண்டில், 2023 ஜனவரி வரை, பதிவுத்துறை அடைந்த வருவாயை விட, 2024 ஜனவரி வரை கூடுதலாக, 952.86 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: பெரிய சாதனை தான் என்பதில், 'டவுட்'டே இல்லை... அதே நேரம், இந்த அளவுக்கு கூடுதல் பத்திரப்பதிவுகள் நடந்திருக்கிறதால, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டுலயும் அடைமழை பெய்திருக்கும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச் செயலர்பழனிசாமி: எம்.ஜி.ஆர்.,குறித்து, '2ஜி' புகழ் ராஜா உணராததில் ஆச்சரியம் இல்லை. தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து, மன்னிப்பு கேட்க மனமில்லாமல், திமிரோடு நடக்கிறார். அவரை கண்டித்து, அவர் எம்.பி.,யாக இருக்கும் நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அவினாசியில், அ.தி.மு.க., சார்பில், வரும், 9ம் தேதி காலை 9:00 மணிக்கு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
டவுட் தனபாலு: ராஜா, நீலகிரி தொகுதி எம்.பி.,யாக இருக்கலாம்... ஆனா, எம்.ஜி.ஆர்., உலக தமிழர்கள் எல்லாருக்கும் பொதுவானவர் தானே... அதனால, மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தாம, அவிநாசியோட அடக்கி வாசிப்பது ஏன் என்ற, 'டவுட்' எழுதே!
அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் நத்தம் விஸ்வநாதன்: மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும், அவர்கள் கவனத்தை ஈர்த்து, மக்கள் கோரிக்கைகளை, அ.தி.மு.க., போராடி செயல்படுத்தும். மனு அளித்தவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை அமையும்.
டவுட் தனபாலு: அது சரி... மாநிலத்தில் உங்க ஆட்சி இருந்த 2019ல் தானே, மதுரையில எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினாரு... அதன்பின், மூணு வருஷம் ஆட்சியில இருந்த நீங்க, அந்த மருத்துவமனையை கொண்டு வர என்ன போராட்டத்தை நடத்துனீங்க என்ற, 'டவுட்' வருதே!

