PUBLISHED ON : பிப் 08, 2024 12:00 AM

-தி.மு.க., -- எம்.பி.,யான டி.ஆர்.பாலு: தமிழக வெள்ள நிவாரண நிதி கேட்டு லோக்சபாவில் பேசிக் கொண்டிருந்தோம். உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துக் கொண்டிருக்கும் போது, அந்த துறைக்கு சம்பந்தமே இல்லாத முருகன் குறுக்கிட்டார். மாநில பேரிடர் நிவாரண நிதி இருக்கிறதே என்ற ரீதியில் அவர் பேசினார். நாங்கள் கேட்பது வேறு; அவர் கூறுவது வேறு. இதன் வாயிலாக, தமிழகத்துக்கு அவர் துரோகம் இழைக்கிறார். அதனால் தான் அவரை, 'அன்பிட்' என்றேன்.
டவுட் தனபாலு: தமிழகத்துக்கு துரோகம் இழைத்ததால முருகனை, 'அன்பிட்' என விமர்சிக்குறீங்களே... 2009ம் வருஷம், பக்கத்துல இருக்கிற இலங்கையில நடந்த உள்நாட்டு போரில், தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர்களை என்ன வார்த்தை சொல்லி விமர்சிக்கணும் என்ற, 'டவுட்' எழுதே!
ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்: ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க நல்ல வாய்ப்பு இருந்தது; பலரும் அதற்காக உழைத்தனர். 25 சிட்டிங் அமைச்சர்களில், 17 பேர் தோற்றுப் போயினர். வேறு வேட்பாளர்களை தேர்வு செய்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்.
டவுட் தனபாலு: 'ராஜஸ்தானில், முதல்வராக இருந்த அசோக் கெலாட் ஆட்களால தான், தோற்றோம்' என்று இப்ப ஏன் சொல்றீங்க... லோக்சபா தேர்தல் வேட்பாளர் தேர்வுலயாவது, எங்க ஆட்களுக்கு வாய்ப்பு தரணும்னு மேலிடத்துக்கு சுட்டிக்காட்டுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி: டில்லி மதுபான கொள்கை ஊழல் மிகப் பெரியது. இந்த வழக்கு விசாரணையை முதல்வர் கெஜ்ரிவால் புறக்கணிக்கிறார்; விசாரணைக்கு ஆஜராக மறுக்கிறார். குஜராத் கலவரம் தொடர்பான விசாரணையில் பிரதமர் மோடி, 12 மணி நேரம் பதிலளித்தார். அவரை பின்பற்றுங்கள்.
டவுட் தனபாலு: பிரதமர் மோடி மடியில் கனமில்லை... அதனால், வழியில் பயமின்றி விசாரணையை எதிர்கொண்டார்... ஆனா, விசாரணையை கெஜ்ரிவால் புறக்கணிப்பதை பார்த்தாலே, அவர் மடியில் வண்டி, வண்டியா கனம் இருப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுதே!

