PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM

சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, முதல்வர் தயாரித்த உரையை தான் கவர்னர் படிக்க வேண்டும். அரசியல் சாசனத்தை மீறி நடக்கும் தமிழக கவர்னர் ரவியை, உடனே ஜனாதிபதி முர்மு பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
டவுட் தனபாலு: ஆளுங்கட்சி என்ன எழுதி கொடுத்தாலும் படிச்சிட்டு போறதுக்கு கவர்னர் ஒன்றும், 'ரோபோ' இல்லையே... மத்திய அரசின் பிரதிநிதியான அவரே, எப்படி மத்திய அரசை குற்றம்சாட்டும் உரையை படிப்பார் என்ற அடிப்படை, 'டவுட்' கூட உங்களுக்கு வரலையா?
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: செந்தில் பாலாஜியை வெளியில் கொண்டு வருவதற்காக, இன்னும் ஒரு வாரத்தில், செந்தில் பாலாஜியின் தம்பியை, 'சரண்டர்' செய்வர் என, நான் எதிர்பார்க்கிறேன். தேர்தல் வருவதால், செந்தில் பாலாஜியை வைத்து சில வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலாவாது ஜாமின் கிடைக்குமா என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டவுட் தனபாலு: அமைச்சர் அந்தஸ்துலயே, 'உள்ளே' போனவர், அதே அஸ்தந்துல வெளியில வந்துடலாம்னு நினைச்சாரு... ஆனா, ஜாமின் கிடைக்காத விரக்தியில, பதவியே போனாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்துட்டது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பத்திரிகை செய்தி: 'உரிமை களை மீட்க, ஸ்டாலின் அழைப்பு' என்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்திய ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக அமைச்சர் உதயநிதி பங்கேற்றதால், கட்சியின் மூத்த நிர்வாகிகள், 'அப்செட்' ஆகினர்.
டவுட் தனபாலு: இனிமே இப்படித்தான் நடக்கும்... இதுக்கெல்லாம், மூத்த நிர்வாகிகள், 'அப்செட்' ஆனா, ஒண்ணும் நடக்காது... கருணாநிதி குடும்பத்தில் இருந்து வர்ற அடுத்த தலைமையை ஏத்துக்குற மனப்பக்குவத்தை அவங்க வளர்த்துக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

