PUBLISHED ON : பிப் 19, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அ.தி.மு.க.,வை தொண்டர்களிடம் ஒப்படைக்கும் வரை சட்டப் போராட்டம் தொடரும். நீதிமன்றங்கள், அ.தி.மு.க., இயக்கம் தொடர்பாக, தற்போது வந்துள்ள தீர்ப்புகள் தற்காலிகமானவை. இனி வரும் தீர்ப்பு, நல்ல தீர்ப்பாக அமையும். தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளோம். எனவே, தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுவை என்னிடம் கொடுக்கலாம்.
-டவுட் தனபாலு: இப்ப, தேனி தொகுதி, எம்.பி.,யா உங்க மகன் ரவீந்திரநாத் இருக்காரே... அவருக்கு மறுபடியும், 'சீட்' கொடுக்க போறதில்லையா... ஒருவேளை, ஜெயிக்கிற வாய்ப்பு இல்லாததால, மகனை களம் இறக்காம, உங்களை நம்பி வந்தவங்களை பலிகடா ஆக்க பார்க்கிறீங்களா என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: மக்கள் நீதி மய்யம் கட்சியின், ஐ.டி., அணி செயலர் கிருபாகரன், அ.தி.மு.க.,வில் இணைந்ததால், கடும் கோபமடைந்த கமல், பதிலடி தரும் வகையில், அ.தி.மு.க.,வில் இருந்து ஒருவரை இழுக்குமாறு, தன் கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வுல இருந்து, தி.மு.க.,ன்னு கட்சி மாறுவாங்க அல்லது பா.ஜ., பக்கம் கூட போவாங்க... ஒரு சீட்டுக்காக, அறிவாலயம் வாசல்ல தவம் கிடக்கிற தன் கட்சிக்கு, அ.தி.மு.க., நிர்வாகிகள் வருவாங்கன்னு, கமல் எதிர்பார்ப்பது எல்லாம் ரொம்பவே ஓவர் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: லோக்சபா தேர்தல் பரப்புரையை, தி.மு.க., தொடங்கி விட்டது. தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க, இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும்; இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும். பாசிசம் வீழும்; 'இண்டியா' வெல்லும்.
டவுட் தனபாலு: அப்படியா... இன்னைய தேதிக்கு, தமிழகத்துல உங்க கூட்டணிக்கு, 38 எம்.பி.,க்கள் இருக்காங்க... கடந்த, அஞ்சு வருஷத்துல, அவங்க எல்லாம் சேர்ந்து,என்னென்ன தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்து இருக்காங்க என்ற, 'டவுட்'டுக்கு விளக்கம் தர முடியுமா?

