PUBLISHED ON : பிப் 21, 2024 12:00 AM

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: நான் அமெரிக்காவில் இருந்து செய்திகளை கொண்டு வரவில்லை; இங்கிருந்து தான் செய்திகள் உருவாக்க வேண்டும். நான் இங்கு கூட்டணி கட்சிகளுடன் பேசி விட்டு, அடுத்த இரண்டு நாட்களில், உங்களை மீண்டும் சந்திக்கிறேன்; அப்போது, எல்லா தகவல்களையும் கூறுகிறேன். கூட்டணி கட்சிகள் இடையே நடக்கும் பேச்சு குறித்து, அடுத்த இரண்டு நாட்களில் நிச்சயமாக கூறுவேன். காங்கிரஸ் கட்சியுடன் நடக்கும் பேச்சு குறித்தும், இரண்டு நாட்களில் கூறுவேன்.
டவுட் தனபாலு: உங்களது பாபநாசம் படத்தில், 'ஆக., 2ம் தேதியை மறந்துடாதீங்க'ன்னு அடிக்கடி சொல்வீங்க... அந்த மாதிரி, வார்த்தைக்கு வார்த்தை, 'இரண்டு நாள், இரண்டு நாள்'னு சொல்றதன் மூலமா, ரெண்டு சீட் தர மறந்துடாதீங்க என்று தி.மு.க.,வுக்கு கோடிட்டு காட்டுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது.
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த்: உறுப்பினர் சேர்க்கை முகாம்களை, மாநிலம் முழுதும் சட்டசபை தொகுதிகள் வாரியாக நடத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்காக, நவீன வசதிகளுடன் மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
டவுட் தனபாலு: தமிழகத்தின் ஆகப் பெரிய கட்சிகளான அ.தி.மு.க., - தி.மு.க.,வுலயே 2 கோடி உறுப்பினர்கள் கிடையாது... அந்த இலக்கை மட்டும் உங்க கட்சியினர் எட்டிட்டாங்க என்றால், 2026ல் தமிழகத்தில் விஜய் ஆட்சி தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி: ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசின் மின்விசிறி சின்னம் வீட்டுக்குள்ளேயே இருக்கும். தெலுங்கு தேசத்தின் சைக்கிள் சின்னம் வெளியே இருக்கும். ஜனசேனாவின் டீ டம்ளர், எப்போதும் பாத்திரம் கழுவும் தொட்டியில் கிடக்கும்.
டவுட் தனபாலு: அது சரி... வீட்டுக்குள்ளயே மின்விசிறியில காத்து வாங்கிட்டு படுத்து கிடந்தா, 'புவ்வா' எப்படி கிடைக்கும்... சைக்கிளை எடுத்துட்டு வேலை வெட்டிக்கு போயிட்டு, களைப்பு தீர டீயை குடிச்ச பிறகு தான், எல்லாரும் மின்விசிறியை தேடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

